

புதுடெல்லி,
ராஜஸ்தானின் ஜெய்பூர் நகரில் உள்ள ஆம்பர் கோட்டைக்கு சுற்றுலாவாசிகள் அதிக அளவில் வந்து செல்வர். இங்கு யானை சவாரி புகழ் பெற்றது. இந்த நிலையில், இந்திய விலங்கு நல வாரியம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஜெய்பூரில் சவாரி மற்றும் பிற சுற்றுலா விசயங்களுக்காக பிடிக்கப்பட்ட 91 யானைகளில் குறைந்தது 10 யானைகளுக்கு காசநோய் பாதிப்பு உள்ளது என தெரிவித்துள்ளது.
இந்த வாரியத்தின் அறிக்கையை தொடர்ந்து, அதனை அடிப்படையாக கொண்டு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு இந்திய பீட்டா அமைப்பு கடிதம் ஒன்று எழுதியுள்ளது.
அதில், யானைகளிடம் இருந்து மனிதர்களுக்கு தொற்றும் தன்மையுடைய மற்றும் பரவ கூடிய காசநோய் அதிக அளவில் ஆம்பர் கோட்டை சவாரிக்கு பயன்படும் யானைகளிடம் உள்ளது தெரிய வந்துள்ளது.
இந்த பாதிக்கப்பட்ட யானைகளை தனிமைப்படுத்தி, அவசர சிகிச்சையை வழங்க வேண்டும். பரிசோதனை செய்யப்படாத அனைத்து யானைகளையும் சுற்றுலாவாசிகளுடன் பழகுவதற்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என மத்திய மந்திரி ஜே.பி. நட்டா மற்றும் மத்திய காசநோய் பிரிவு அதிகாரிகளிடம் பீட்டா அமைப்பு கேட்டு கொண்டுள்ளது.
கடந்த வருடம் 5 மாதங்களில் 4 யானைகள் இறந்தன. அவற்றில் பெருமளவிலான யானைகளுக்கு காசநோய் உள்பட சுவாச நோய்களால் பாதிப்பு இருந்ததும் மற்றும் ஒட்டுண்ணிகள் தாக்குதல் இருந்ததும் பிரேத பரிசோதனை அறிக்கை வழியே தெரிய வந்துள்ளது என இந்திய பீட்டா அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 2025ம் ஆண்டிற்குள் காசநோய் ஒழிக்கப்படும் என்ற பிரதமரின் திட்டம் வரவேற்கத்தக்கது. ஆனால் சிறை பிடிக்கப்பட்ட, காசநோய் பாதிப்பு கண்ட மற்றும் அதனால் மனிதர்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் யானைகளை தவிர்த்து விட்டு இத்திட்டத்தினை செயல்படுத்த முடியாது என்றும் தெரிவித்துள்ளது.