

புதுடெல்லி,
மகாத்மா காந்தியின் அகிம்சை மீதான அர்ப்பணிப்பை கவுரவிக்கும் விதமாக, எதிர்வரும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வரும் அக்டோபர் 2-ந்தேதி முதல் விளம்பரப் பலகைகள், தொலைக்காட்சி, இணையதளங்கள் மற்றும் பிற ஊடகங்களில் இறைச்சியை ஊக்குவிக்கும் விளம்பரங்களை தடை செய்யுமாறு மத்திய அரசிடம் விலங்கு உரிமைகள் அமைப்பான ‘பீட்டா இந்தியா’ வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை மந்த்ரி அஸ்வினி வைஷ்ணவிற்கு எழுதப்பட்டுள்ள கடிதத்தில், விலங்கு நலன், பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த கவலைகளை சுட்டிக்காட்டி, நாடு தழுவிய அளவில் இறைச்சி விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பீட்டா இந்தியா கேட்டுக் கொண்டுள்ளது.
ஆம்ஸ்டர்டாம், ஹார்லெம், உட்ரெக்ட் மற்றும் நிஜ்மெகன் உள்ளிட்ட பல ஐரோப்பிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இறைச்சி விளம்பரக் கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டியதோடு, பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உலக தலைவர்களை உபசரித்தபோது, அங்கு இறைச்சியில்லா உணவு பரிமாறப்பட்டது என்பதையும் பீட்டா அமைப்பு தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
கோழிகள் உணர்வுடன் இருக்கும்போதே கொல்லப்படுவதாகவும், மாடுகள் மற்றும் எருமைகள் நெரிசல் மிகுந்த வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதாகவும், ஆடுகள் மற்றும் பன்றிகள் கொடூரமாகக் கையாளப்படுவதாகவும் குற்றம்சாட்டியுள்ள பீட்டா அமைப்பு, இறைச்சி வெட்டுதல் மற்றும் விலங்குகளை வாகனங்களில் கொண்டு செல்லும் நடைமுறைகள் குறித்த விசாரணைகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், இந்தியாவில் அகிம்சையில் வேரூன்றிய, இறைச்சி உண்ணாத உணவுப் பழக்கம் கொண்ட பல நூற்றாண்டுகள் பழமையான பாரம்பரியம் உள்ளது என்றும், உலகின் மிகப்பெரிய சைவ உணவு உண்போர்(Vegetarian) மக்கள்தொகையைக் கொண்ட நாடு இந்தியா என்றும் தெரிவித்துள்ள பீட்டா இந்தியா அமைப்பு, காந்தி ஜெயந்தியாக அனுசரிக்கப்படும் அக்டோபர் 2-ந்தேதி முதல், இறைச்சிக்கான அனைத்து வகை விளம்பரங்களையும் தடை செய்ய உத்தரவிட வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது.