உ.பி.யில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் இடிப்பை எதிர்த்து மனு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

உத்தரபிரதேசத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகளை இடிக்கப்படுவதை உடனடியாக நிறுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Published on

லக்னோ,

ஞானவாபி மதவழிபாட்டு தலம் தொடர்பாக கடந்த மாதம் ஆங்கில தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தில் பங்கேற்ற நபர் இந்து மத கடவுள் சிவலிங்கம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த விவாதத்தில் பங்கேற்ற பாஜக செய்தித்தொடர்பாளரான நுபுர் சர்மா இஸ்லாமிய மத கடவுளின் இறைதூதர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் பூதாகாரமானதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். அதேவேளை நுபுர் சர்மாவை கைது செய்யவேண்டுமென கூறி நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய மதத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பல்வேறு பகுதிகளில் வன்முறையில் முடிந்தது.

குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறியது. இதனை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்ட நபர்களின் வீடுகள் அரசு நிலத்தில் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தால் அதை இடிக்கும்படி உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது.

அந்த வகையில், கான்பூர் வன்முறைக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் முகமது ஜாவித் என்பவரின் பிரக்யாராஜ் நகரில் உள்ள வீடு அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதாக கூறி வீட்டை கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகள் புல்டோசர் கொண்டு இடித்து தள்ளினர். வன்முறையில் ஈடுபட்ட மேலும் சிலரின் வீடுகளையும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளதாக கூறி அதிகாரிகள் இடிக்கும் நடவடிக்கையி இறங்கியுள்ளனர்.

இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக கூறப்படும் நபர்களின் வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தால் அதை இடிக்கும்படி உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டுள்ளதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச அரசு வீடுகளை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாக கைவிடவும், வீடுகளை இடிக்க பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரியும் ஜமியத் உல்மா-ஐ-ஹிந்த் என்ற அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.

வன்முறையில் ஈடுபட்டவர்களின் வீடுகள் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருந்தால் அதை உத்தரபிரதேச அரசு இடித்து தள்ளி வரும் நிலையில் இது தொடர்பான வழக்கு நாளை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ள நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருத்தப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com