

மத்திய பிரதேசத்தில், மாநிலங்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட மீனாட்சி நடராஜனின் வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அதிகாரி நிராகரித்தார். அதாவது தெலுங்கானாவில் அவர் மீது நிலுவையில் உள்ள வழக்கை குறிப்பிடாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் இது முற்றிலும் சட்டவிரோதமானது என்றும், இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் தேர்தல் கமிஷனிடம் காங்கிரஸ் கட்சி முறையிட்டது. இதுதொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், அபிஷேக் சிங்வி, வேட்பாளர் மீனாட்சி நடராஜன் உள்ளிட்டோர் தேர்தல் கமிஷன் அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். மேலும் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நேற்று அவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனு தொடர்பாக நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, அதுல் சந்துர்கர் அமர்வில் மூத்த வக்கீல் அபிஷேக் சிங்வி ஆஜராகி, இந்த மனுவை விசாரணைக்கு எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தவறுதலாக மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டு இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார். பின்னர் இந்த மனுவை இன்று (வெள்ளிக்கிழமை) விசாரிப்பதாக நீதிபதிகள் கூறி, அதற்கு பட்டியலிடுமாறு அறிவுறுத்தினர். அதன்படி இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மீனாட்சி நடராஜன் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது. தேர்தல் நடக்கும் போது நீதிமன்றங்கள் தலையிட முடியாது. சட்டப்படியான தீர்வுக்கு தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும் என்று மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.