வழிபாட்டுத் தளங்களை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்

இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் புத்த மத வழிபாட்டுத்தலங்களை பக்தர்கள் நிர்வகிக்க உரிமை கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தளங்களை நிர்வகிப்பது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல்
Published on

புதுடெல்லி,

வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் என்பவர், சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், முஸ்லிம், பார்சி மற்றும் கிறிஸ்தவர்களைப் போல இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் புத்த மதத்தவர்களின் வழிபாட்டுத்தலங்களையும் பக்தர்கள் நிர்வகிக்க உரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் புத்த வழிபாட்டுத் தளங்களை நிர்வாகிக்க உருவாக்கப்பட்டுள்ள மாநிலச் சட்டங்கள் தன்னிச்சையானவை என்றும் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை என்றும் அறிவிக்க வேண்டும் என அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தளங்களையும் நிர்வகிக்க் ஒரே மாதிரியான சட்டங்களை உருவாக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள வழிபாட்டுத் தளங்கள் கடவுள் மறுப்பாளர்களால் நிர்வகிக்கப்படுவது நகை முறணாக உள்ளது என்றும் வழிபாட்டுத் தளங்களின் நிதி ஆதாரங்களை மாநில அரசுகள் சீரழித்துள்ளது என்றும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழகத்தைப் பொறுத்தவரை இந்து அறநிலையத்துறை சுமார் 30 ஆயிரம் கோவில்களை அதன் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளது என்றும் இவ்வளவு கோவில்களை நிர்வகிக்க போதுமான ஊழியர்களையும், அதிகாரிகளையும் தமிழ்நாடு அரசு கொண்டிருக்கவில்லை என்றும், இதனால் அந்த பழமை வாய்ந்த கோவில்கள் பாழடைந்து வருகின்றன என்றும் வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாய் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com