

புதுடெல்லி,
நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் சமீபத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத்தொடர்ந்து அவர் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், வசந்தகுமார் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ததால் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலுக்கான செலவை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்து இருந்தார்.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் ரோகின்டன் பாலி நாரிமன், சூரியகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஜெயசுகின் ஆஜரானார். விசாரணை தொடங்கியதும் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.