

புதுடெல்லி,
பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் கோபால கிருஷ்ண அகர்வால் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
மோடி அரசு சரியான முடிவை சரியான நேரத்தில் எடுத்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தி வருவாய் ஈட்டியது. அதை கொரோனா காலத்தில் மக்களுக்கு நிதி வழங்க பயன்படுத்தியது.
தற்போது கச்சா எண்ணெய் விலை உயர்ந்தாலும், மறைமுக, நேரடி வரி வருவாய் அதிகமாக கிடைப்பதால், பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை குறைத்துள்ளது. பா.ஜனதா ஆளும் மாநிலங்கள், வாட் வரியை குறைத்துள்ளன. இதனால், பொதுமக்களுக்கு ரூ.88 ஆயிரம் கோடி மிச்சமாகும்.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பை சமாளித்ததில், மோடி அரசின் விவேகமான கொள்கைகளால் இந்தியா மற்ற நாடுகளை விட நல்ல நிலையில் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.