பி.எப். சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசு.. வட்டியை வரவு வைக்க தொடங்கியது அரசு

விரைவில் அனைத்து பி.எப் சந்தாதாரர்களுக்கும் வட்டித் தொகை வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பி.எப். சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசு.. வட்டியை வரவு வைக்க தொடங்கியது அரசு
Published on

புதுடெல்லி:

ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி (பி.எப். வட்டி) குறித்து ஒவ்வொரு ஆண்டும், பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) முடிவு செய்கிறது. 2020-21இல் வட்டி விகிதம் 8.50 ஆக இருந்தது. கடந்த ஆண்டு (2021-22) 8.10 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு மிக குறைவான வட்டி ஆகும். இதனால் சந்தாதாரர்கள் அதிருப்தியும் ஏமாற்றமும் அடைந்தனர்.

இந்நிலையில், 2022-23ஆம் நிதியாண்டுக்கு வட்டி சற்று உயர்த்தப்பட்டது. அதாவது, 8.15 சதவீத வட்டி வழங்குவதாக கடந்த ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அதிகபட்ச வட்டி விகிதமாகும். ஆனால், வட்டி தொகை எப்போது அனைவரது கணக்கிலும் வரவு வைக்கப்படும் என்பது குறித்து அரசாங்கம் அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், பி.எப். சந்தாதாரர்களுக்கு தீபாவளி பரிசாக, வட்டித் தொகை வரவு வைக்கும் பணியை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) தொடங்கியிருக்கிறது. விரைவில் அனைத்து சந்தாதாரர்களுக்கும் வட்டித் தொகை வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே 24 கோடி கணக்குகளுக்கு 8.15 சதவீத வட்டித் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும், நவம்பர் இறுதிக்குள் அனைத்து சந்தாதாரர்களுக்கும் வட்டித்தொகை செலுத்தப்படும் என்றும் மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

எஸ்.எம்.எஸ்., மிஸ்டு கால், UMANG செயலி மற்றும் EPFO இணையதளம் வாயிலாக வருங்கால வைப்பு நிதி கணக்கு இருப்பை சரிபார்க்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com