

புதுடெல்லி,
பி.எப். உறுப்பினர்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், பி.எப். கணக்குகளில் பராமரிக்கப்படும் குறைந்தபட்ச இருப்புத்தொகையை 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு குறைத்துள்ளது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பின் மத்திய அறங்காவலர்கள் வாரியத்தின் 240-வது கூட்டம் நடந்தது. அதில் பி.எப். சேமிப்பை திரும்பப்பெறும் விதிமுறைகளில் செய்யப்பட உள்ள மாற்றங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. முறையான திரும்பப்பெறுதல் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்கீழ் ஓய்வு பெறும் பி.எப். உறுப்பினர்கள், தங்களது பி.எப். சேமிப்பை ஒரே நேரத்தில் முழுமையாக திரும்பப் பெறுவதற்கு பதிலாக, வழக்கமான தவணைகளில் பெறலாம். அதாவது மாதம், காலாண்டு, அரையாண்டு அடிப்படையில் பணத்தை திரும்பப் பெறலாம்.
மீதியுள்ள இருப்புத்தொகைக்கு தொடர்ந்து வட்டி வழங்கப்படும். இதன்மூலம் ஓய்வு பெறும் உறுப்பினர்கள் தங்கள் சேமிப்பை பராமரிப்பதுடன் தொடர்ந்து வருவாய் பெற முடியும். ஆனால், இது முற்றிலும் உறுப்பினர்களின் விருப்பத்தின் அடிப்படையிலானது. ஓய்வுக்கு பிறகு அவர்களுக்கு நிதி பாதுகாப்பு அளிக்கக்கூடியது.
இத்திட்டம் அமல்படுத்தப்படும் ஆரம்ப கட்டத்தில், 55 வயதை கடந்த 6 லட்சத்து 32 ஆயிரம் பி.எப். உறுப்பினர்கள் முக்கிய பயனாளிகளாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேமிப்பை திரும்பப்பெறும் காலகட்டத்தில், ஒருவேளை உறுப்பினர் இறந்துவிட்டால், மீதி தொகையை அவரது நியமனதாரர் முழுமையாகவோ அல்லது தவணையாகவோ பெறலாம். மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு பிறகு, இந்த மாற்றங்கள் குறித்த அறிவிப்பாணை வெளியிடப்படும்.
பி.எப். உறுப்பினர்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் வகையில், பி.எப். கணக்குகளில் பராமரிக்கப்படும் குறைந்தபட்ச இருப்புத்தொகையை 25 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பு குறைத்துள்ளது. அத்துடன், பி.எப். பணத்தை இறுதிக்கட்டமாக திரும்பப்பெறுவதற்கான காத்திருப்பு காலத்தை 12 மாதங்களில் இருந்து 2 மாதங்களாக குறைத்துள்ளது.