2-ம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி

2-ம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 1,400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
2-ம் கட்ட காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: இன்று தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

தமிழ்நாட்டுக்கும், உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி என்று அழைக்கப்படும் காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்பை புதுப்பிக்கும் வகையில் மத்திய அரசின் கல்வித்துறை, காசி தமிழ் சங்கமம் எனும் நிகழ்ச்சியை கடந்த ஆண்டு நவம்பர் 16-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடத்தியது.

அதைப்போல இந்த ஆண்டும் அதே நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 'கே.டி.எஸ்.- 2.0' (காசி தமிழ் சங்கமம் 2-ம் கட்டம்) என பெயரிடப்பட்டு உள்ள இந்த சங்கமம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை நடைபெறுகிறது.

2-ம் கட்ட நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், வணிகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள், மதகுருமார்கள், எழுத்தாளர்கள் என 7 பிரிவுகளில் தலா 200 பேர் வீதம் மொத்தம் 1,400 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் கங்கை, யமுனை, சரஸ்வதி, சிந்து, நர்மதா, கோதாவரி மற்றும் காவிரி என்கிற பெயர்களில் 7 குழுக்களாக 8 நாள் பயணத்திட்டத்தில் உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி, பிரயாக்ராஜ் மற்றும் அயோத்திக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

முதல்கட்ட சங்கம நிகழ்ச்சியை தொடங்கி வைத்ததுபோலவே 2-ம் கட்ட சங்கமத்தையும் பிரதமர் மோடி இன்று மாலை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com