பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள நடிகை புகைப்படம்

பீகாரில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில், பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் பட்டியலில் மலையாள நடிகை புகைப்படம்
Published on

பாட்னா,

பீகார் மாநிலத்தில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதித் தேர்வு, கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான முடிவுகள் கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்டன. அதில் சில தொழில்நுட்ப பிரச்சினைகள் காரணமாக உருது, சமஸ்கிருதம் மற்றும் அறிவியல் ஆகிய 3 பாடங்களின் மதிப்பெண்கள் வெளியிடப்படாமல் இருந்தது.

அவை தற்போது சரி செய்யப்பட்டு அரசு இணையதளத்தில் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரிஷிகேஷ் குமார் என்ற மாணவரின் மதிப்பெண் பட்டியலில், அவரது புகைப்படத்திற்கு பதிலாக மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரனின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து பீகார் ஆசிரியர் தகுதித் தேர்வில் முறைகேடுகள் நடத்துள்ளதாக பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டத் துவங்கியுள்ளனர். இது குறித்து பிகாரின் ஆளும் கட்சியான ஜனதா தளம் கட்சியின் தலைவர் குலாம் காஸ் கூறுகையில், அதிக எண்ணிக்கையிலான மதிப்பெண் பட்டியலை வெளியிடும் போது சிறு தவறுகள் நடந்துவிடுகின்றன. தவறுகள் விரைவில் சரிசெய்யப்படும். மாநிலத்தில் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்க நாம் முயற்சி செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயம், பீகாரில் எந்த நியமனமும் மோசடியில்லாமல் நிரப்பப்படுவதில்லை என எதிர்கட்சியான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர், தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். பீகாரில் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான பீகார் பொது சுகாதார பொறியியல் துறையின் தகுதிப்பட்டியலில், இந்தி நடிகை சன்னி லியோனின் புகைப்படம் தவறுதலாக இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com