

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு அதிவேகத்தில் பரவி வருகிறது. சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை 90 ஆயிரத்திற்கும் கூடுதலாக பதிவாகி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால், சிகிச்சை அளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
இந்த நிலையில், கொரோனா பாதித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று நேரில் சந்தித்து பேசினார். அவர்களுக்கு ஆறுதலும் கூறியுள்ளார்.
அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்ட நம்முடைய மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பலர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் நலம்பெற இறைவனை பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.