சபரிமலைக்கு 50-வது முறையாக யாத்திரை... 10 வயது சிறுமி சாதனை...!

சிறுமி அதிதி, எழுகோனில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.
சபரிமலைக்கு 50-வது முறையாக யாத்திரை... 10 வயது சிறுமி சாதனை...!
Published on

சபரிமலை,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் புகழ் பெற்றவை. இதற்காக ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 1-ந்தேதி முதல் 60 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். அந்த நாட்களில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி விரதம் இருந்து சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்வார்கள்.

அதன்படி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 30-ந்தேதி மீண்டும் திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரரு மகேஷ் கோகனரு தலைமையில் மேல் சாந்தி முரளி நடையை திறந்தார். மகர விளக்கின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக வரும் 15-ந்தேதி மகரஜோதி தரிசனம் நடைபெற உள்ளது.

சபரிமலைக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறுவர்-சிறுமிகள் அதிகளவில் வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிகமான குழந்தைகளை பக்தர்கள் அழைத்து வருகின்றனர். இந்நிலையில் 10 வயது சிறுமி ஒருவர் 50-வது முறையாக சபரிமலைக்கு யாத்திரை வந்து சாதனை படைத்துள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டம் ஏழுகோன் பகுதியை சேர்ந்தவர் அபிலாஷ் மணி. இவரின் மகள் அதிதிக்கு 10 வயது பூர்த்தியாக ஒரு நாள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில் நேற்று முன்தினம் தனது தந்தையுடன், இருமுடி கட்டி சபரிமலைக்கு 50-வது முறையாக யாத்திரை வந்தார்.

அதிதி பிறந்து ஒன்பது மாத குழந்தையாக இருந்தபோது சபரிமலைக்கு தனது தந்தையுடன் வந்து முதன் முறையாக ஐய்யப்பனை தரிசனம் செய்தார். அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் மாதாந்திர பூஜை மற்றும் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சபரிமலைக்கு வந்துள்ளார். இதன் காரணமாக 10 வயதிற்குள் 50 முறை சபரிமலைக்கு வந்த பெருமையை அவர் பெற்றுள்ளார். சிறுமி அதிதி, எழுகோனில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com