

கேரளத்தில் சட்டசபை தேர்தல் வருகிற 9-ந்தேதி நடக்கிறது. இதனால் அங்கு தலைவர்களின் இறுதி கட்ட பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் கேரளத்தில் ஒரே நாளில் பிரதமர் மோடி, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் பிரசாரம் செய்தனர். பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் ரோடு ஷோவும், திருவல்லாவில் பிரசார பொதுக்கூட்டத்திலும் கலந்து கொண்டு பா.ஜனதா தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
எர்ணாகுளம், இடுக்கி, ஆலப்புழை ஆகிய மாவட்டங்களில் ராகுல் காந்தி காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பரப்புரையாற்றினார். காலை 10 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்த அவர் நேராக ஆலப்புழை சென்று அங்கு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் கேரளத்தில் 75 சதவீத விவசாயிகள் கடனில் சிக்கி தவிக்கிறார்கள். போதைப் பொருட்களின் களஞ்சியமாக கேரளம் மாறிவிட்டது. கன்னியாஸ்திரிகள் தாக்கப்படுகிறார்கள், கிறிஸ்தவர்கள் உள்பட சிறுபான்மையின மக்கள் பல வகைகளில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எப்ஸ்டீன் ஆவணத்தில் பிரதமர் மோடியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதனை மறைக்க டிரம்ப் சொல்வதைப் போல மோடி ஆடுகிறார்.
பெட்ரோல், எரிவாயு எங்கிருந்து வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்க டிரம்ப் யார்? கேரளத்தின் முதல்-மந்திரியும், மோடியும் தங்களை ஏகாதிபதிகளாக நினைக்கிறார்கள். பதவி இருப்பதால் அகங்காரத்தில் இருவரும் உள்ளனர். கேரளத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயனை பிரதமர் மோடி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளார். வெளிப்படையாக கூற வேண்டுமானால், இடது ஜனநாயக முன்னணியில் இடதுசாரி என்று ஒன்றும் இல்லை. தேர்தலுக்கு பிறகு இடதுசாரியில் எதுவும் மிஞ்சி இருக்காது. கேரளத்தின் இடது முன்னணி அரசை பா.ஜனதா இயக்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.