கேரள முன்னாள் முதல்-மந்திரி அச்சுதானந்தன் உடலுக்கு பினராயி விஜயன் இறுதி அஞ்சலி

கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா காரத் மற்றும் பிற தலைவர்கள் அச்சுதானந்தன் உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர்.
திருவனந்தபுரம்,
கேரள முன்னாள் முதல்-மந்திரி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான வி.எஸ். அச்சுதானந்தன் நேற்று காலமானார். அவருக்கு வயது 101.
வயது முதிர்வால் 2019-ம் ஆண்டு முதல் அரசியலில் இருந்து ஒதுங்கியே இருந்த அவருக்கு, கடந்த ஜூன் மாதம் 23-ந்தேதி திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. இதனால், திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் சிறுநீரக பிரச்சினையாலும் அவர் அவதிப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று பிற்பகல் 3.20 மணிக்கு காலமானார்.
இதனையடுத்து அவரது உடல் மருத்துவமனையில் இருந்து நேற்று மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் ஏ.கே.ஜி. கல்வி ஆராய்ச்சி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தியதும், இரவு 8 மணிக்கு அவரது வீட்டுக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக தலைமை செயலக தர்பார் அரங்கில் வைக்கப்பட்டு உள்ளது. இதன்பின்னர் பிற்பகல் 2 மணிக்கு தேசிய பாதை வழியாக அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் ஆலப்புழை எடுத்து செல்லப்படுகிறது.
நாளை (புதன்கிழமை) காலையில் ஆலப்புழை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு அலுவலகத்தில் பொதுமக்கள், தொண்டர்கள் இறுதி அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் ஆலப்புழை சுடுகாட்டில் தகனம் செய்யப்படுகிறது.
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகள், காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மறைந்த வி.எஸ்.அச்சுதானந்தனுக்கு வசுமதி என்ற மனைவியும், அருண்குமார் என்ற மகனும், வி.வி. ஆஷா என்ற மகளும் உள்ளனர். அச்சுதானந்தனின் மறைவையொட்டி கேரளாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 3 நாள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது.
இந்நிலையில், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், முன்னாள் எம்.பி. மற்றும் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான பிருந்தா காரத் மற்றும் பிற தலைவர்கள் அவருடைய உடலுக்கு இன்று இறுதி அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அரசியல் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.






