பினராயி விஜயனின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி - வேட்பு மனுவில் தகவல்

2024-25ம் நிதியாண்டில் ரூ.5.33 லட்சம் வருமானம் ஈட்டியதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
பினராயி விஜயனின் சொத்து மதிப்பு ரூ.1 கோடி - வேட்பு மனுவில் தகவல்
Published on

திருவனந்தபுரம்,

தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் நடப்பு ஆண்டில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்தலுக்கான தேதி, வாக்கு எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதில், கேரளா (140 தொகுதிகள்) மற்றும் அசாம் (126 தொகுதிகள்) ஆகிய மாநிலங்களுக்கும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கும் (30 தொகுதிகள்) ஏப்ரல் 9-ந்தேதி ஒரே கட்டத்தில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4-ந்தேதி நடைபெறும்.

இந்நிலையில் கேரளாவின் தர்மடம் சட்டமன்ற தொகுதியில் அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் தனது வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார். தர்மடம் தொகுதியில் அவர் 3-வது முறையாக போட்டியிடுகிறார். இதற்கு முன்னர் அவர் குத்துப்பரம்பா தொகுதியில் மூன்று முறையும், பையனூரில் ஒரு முறையும் வெற்றி பெற்றிருந்தார்.

தர்மடம் தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) வி.பி.அப்துல் ரஷீத்தை வேட்பாளராக நிறுத்தியுள்ளது, அதே சமயம் பா.ஜ.க. கே.ரஞ்சித்தை தனது வேட்பாளராக அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பினராயி விஜயன் தனது வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, பினராயி விஜயன் தனக்கு சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான அசையும் மற்றும் அசையா சொத்துகள் இருப்பதாக வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

அதே போல், பினராயி விஜயன் தனது மனைவியிடம் 80 கிராம் தங்கம் உள்பட சுமார் ரூ.60 லட்சம் மதிப்புள்ள அசையும் சொத்துகளும், ரூ.36 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயனுக்கு ரூ.45 லட்சத்திற்கும் அதிகமான அசையும் சொத்துகள் உள்ளதாகவும், அவற்றில் பல்வேறு வங்கிகளில் உள்ள வைப்புத்தொகைகளும், கண்ணூர் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் பங்குகளும் அடங்கும் என்றும் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதோடு, தனது பெயரில் கண்ணூரில் உள்ள பதிரியாத் அம்சோமில் ஒரு குடியிருப்பு மற்றும் 78 சென்ட் விவசாய நிலம் உள்பட, ரூ.56 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளதாக பினராயி விஜயன் வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனக்கும் தன் மனைவிக்கும் எந்தக் கடன்களும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

2024-25ம் நிதியாண்டில் பினராயி விஜயன் ரூ.5.33 லட்சம் வருமானம் ஈட்டியதாகவும், அதே காலகட்டத்தில் தனது மனைவி ரூ.5.77 லட்சம் வருமானம் ஈட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பினராயி விஜயன் தனது வேட்பு மனுவில், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு மற்றும் அமலாக்க இயக்குநரகத்தின் (ED) விசாரணை உட்பட 6 வழக்குகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com