மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டம்: மத்திய போக்குவரத்து மந்திரி கோர்ட்டுக்கு வருவாரா? சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி

மின்சார வாகனங்களை படிப்படியாக அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து மத்திய போக்குவரத்து மந்திரி கோர்ட்டுக்கு வந்து விளக்கம் அளிப்பாரா? என்று சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள்.
மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் திட்டம்: மத்திய போக்குவரத்து மந்திரி கோர்ட்டுக்கு வருவாரா? சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் கேள்வி
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் வாகனங்களுக் கான பெட்ரோலிய பொருட் கள் தேவையின் பெரும்பகுதி இறக்குமதி மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதற்காக ஏராளமான பணம் செலவிடப்படுகிறது. இதை கருத்தில் கொண்டும், காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையிலும் மின்சார வாகனங்களின் உற்பத்திக்கும், பயன்பாட்டுக்கும் அரசு ஊக்கம் அளித்து வருகிறது.

இந்த நிலையில், மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பது தொடர்பாக தொண்டு நிறுவனம் ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் பிரசாந்த் பூஷண் வாதாடுகையில், தேசிய மின் வாகனங்கள் திட்டத்தின் கீழ், அரசு 2020 மின்சார வாகனங்களை வாங்குவதாகவும், பெட்ரோல் விற்பனை நிலையங் கள் போன்ற முக்கிய இடங்களில் மின்சார வாகனங்களுக்கு மின்சாரம் சார்ஜ் செய்வதற்கான வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.

நீதிபதிகள் கேள்வி

இதைத்தொடர்ந்து நீதிபதிகள், காற்று மாசுபடுவதை தடுக்கும் வகையில் பொது போக்குவரத்து மற்றும் அரசு வாகனங்களை படிப்படியாக மின்சார வாகனங்களாக மாற்றும் திட்டம் குறித்து தங்களுக்கு விளக்கி கூற மத்திய போக்குவரத்து மந்திரி நிதின் கட்காரி கோர்ட்டுக்கு வருவாரா? என்று மத்திய அரசின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ்.நட்கர்னியிடம் கேட்டனர்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஏ.என்.எஸ்.நட்கர்னி, அரசியல்வாதிகள் கோர்ட்டில் ஆஜராவதில் எந்த தவறும் இல்லை என்றும், ஆனால் இந்த பிரச்சினைக்காக போக்குவரத்து மந்திரி கோர்ட்டில் ஆஜரானால், அதை அரசியல் நோக்கத்தில் சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்றும் கூறினார்.

ஆஜராக தேவை இல்லை

அவரது இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், போக்குவரத்து மந்திரியோ அல்லது சுற்றுச்சூழல் மந்திரியோ கோர்ட்டில் ஆஜராக தேவை இல்லை என்றும், மனுதாரரின் வக்கீல் பிரசாந்த் பூஷண் அரசியல்வாதி என்பதால், அவர் மந்திரிகளுடன் விவாதிக்கப் போவதில்லை என்றும் கூறினார்கள்.

அத்துடன், மின்சார வாகனங்களை படிப்படியாக அறிமுகப்படுத்துவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளுடன் அரசு ஆலோசித்து முடிவு எடுப்பது சரியாக இருக்கும் என்று தாங்கள் கருதுவதாக கூறிய நீதிபதிகள், வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com