விமான விபத்து: விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா? - மத்திய அரசு விளக்கம்

விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணம் என பரவும் தகவலுக்கு, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
விமான விபத்து: விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா? - மத்திய அரசு விளக்கம்
Published on

புதுடெல்லி,

குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ள லண்டன் நகருக்கு ஏர்-இந்தியா விமானம் புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கீழே விழுந்து வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் குஜராத் முன்னாள் முதல்-மந்திரி விஜய் ரூபானி உள்பட 270 பேர் பலியாகினர். விமானத்தில் இருந்த ஒரே ஒருவர் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பலியானவர்களின் மரபணுக்கள் உறுதி செய்யப்பட்டு, உறவினர்களிடம் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. இந்த கோர விபத்துக்கான காரணம் என்ன? என்பது குறித்த விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சர்வதேச அளவில் உதவி கோரப்பட்டு இதற்கான பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில், ஏர் இந்தியா விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுதான் காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

அதில், விமானம் ஓடுதளத்தில் இருந்து 'டேக் ஆப்' ஆகி வான் நோக்கி பறக்க தொடங்கியதும் விமானியின் இருக்கை 'லாக்' ஆகாமல் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது.

இதனால் விமானியின் இருக்கை பின்னோக்கி தர தரவென நகர்ந்து சென்றது. அப்போது விமானி, அதன் கட்டுப்பாட்டு கருவியை கட்டுப்படுத்த முடியாமல் பிடித்து இழுத்தார். இதனால் விமானம் நடுவானில் பறக்கும்போது ஒரே சீராக சமநிலையில் பறக்க வைக்கும் 'ஐடில்' நிலையை அடைந்தது. 'டேக் ஆப்' ஆகி மேலே எழும்பி பறந்த சில நொடிகளுக்குள், 'ஐடில்' நிலையை அடைந்ததால் என்ஜினின் வேகம் உடனடியாக குறைந்தது.

இதனை பார்த்த சக விமானி விமானம் பறப்பதை கட்டுப்படுத்தும் கருவியை தனது கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். ஆனாலும் அந்த முயற்சி தோல்வியை தழுவி, அடுத்த சில நொடிகளுக்குள் மருத்துவ மாணவர்கள் தங்கியிருந்த கட்டிடத்தின் மீது விமானம் விழுந்தது.

இந்த சம்பவம் பற்றி விமானி அறையில் விமானியும், சக விமானியும் பேசிய உரையாடல் கருப்பு பெட்டியில் பதிவாகியிருப்பதாகவும் அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்களில் பரவும் இந்த தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், 'இந்த தகவல் தவறானது. இதுபோன்ற அதிகாரப்பூர்வமற்ற தகவல்களை யாரும் நம்பவேண்டாம்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com