மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தால் 6 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்: பிரதமர் மோடி

வெளிநாடுகளில் திருமணம் செய்யும் நோய் உங்கள் சமூகத்தில் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.
மத்திய அரசின் ஆயுஷ்மான் திட்டத்தால் 6 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர்: பிரதமர் மோடி
Published on

ஆமதாபாத்,

குஜராத்தின் அம்ரேலி நகரில் அமைய உள்ள புற்றுநோய் ஆஸ்பத்திரியின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் காணொலி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் உள்நாட்டு சுற்றுலாவை ஊக்குவிக்குமாறு மக்களை கேட்டுக்கொண்டார். மேலும் வெளிநாடுகளில் திருமணம் செய்வதை தவிர்க்குமாறும் வலியுறுத்தினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

புற்றுநோய் போன்ற தீவிர நோய்க்கு சிகிச்சை அளிப்பது எந்தவொரு நபருக்கும் அல்லது குடும்பத்திற்கும் ஒரு பெரிய சவாலாக உள்ளது. எனவே புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதில் மக்கள் இடையூறுகளை சந்திக்கக்கூடாது என்பதை எங்கள் அரசு உறுதி செய்திருக்கிறது. இதற்காக சுமார் 30 புதிய ஆஸ்பத்திரிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. அத்துடன் மலிவு விலையில் மருந்துகளும் கிடைக்க வசதி செய்யப்பட்டு இருக்கின்றன. மேலும் 10 ஆஸ்பத்திரிகளுக்கான பணிகள் நடந்து வருகின்றன. புற்றுநோயின் தொடக்க நிலை சிகிச்சைக்காக கிராம அளவில் 1.5 லட்சத்துக்கு அதிகமான சுகாதார மையங்கள் கட்டப்பட்டு உள்ளன. இந்த ஆயுஷ்மான் ஆரோக்கிய நிலையங்கள் கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய உதவியுள்ளன. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம் 6 கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு உதவியுள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் புற்றுநோயாளிகள் ஆவர்.

வெளிநாடுகளில் திருமணம் செய்வது சரியானதா? இதற்காக இந்தியாவின் எவ்வளவு செல்வம் வெளிநாடுகளுக்கு செல்கிறது? நமது நாட்டில் திருமணம் செய்ய முடியாதா? இப்படி வெளிநாடுகளில் திருமணம் செய்யும் நோய் உங்கள் சமூகத்தில் நுழையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நமது வளங்கள் உள்நாட்டிலேயே நீடித்திருக்க இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றுதான் நான் சொல்வேன். இதைப்போல உள்நாட்டு சுற்றுலாவை ஊக்கப்படுத்த உதவுங்கள். நீங்கள் பயணம் செய்ய விரும்பினால், உள்நாட்டில் செல்லுங்கள். முடிந்த அளவு உங்கள் நாட்டுக்குள் சுற்றுலா செல்லுங்கள். உங்கள் நாடு முழுவதும் பயணம் செய்யுங்கள், உங்கள் நாட்டு சுற்றுலாவை மேம்படுத்துங்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com