

புதுடெல்லி,
இந்தோனேஷியாவின் சுலேவேசியா தீவில் நேற்று முன்தினம் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் சுலேவேசியாவின் தாங்கலாவில் இருந்து வடகிழக்காக 56 கிலோ மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழம் மையம் கொண்டு 7.5 ரிக்டர் அளவில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது. சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கம் காரணமாக பல கட்டிடங்கள் கடுமையாக சேதமடைந்தன.
இதனிடையே நிலநடுக்கத்தை அடுத்து பல இடங்களில் சுனாமியும் ஏற்பட்டது. பாலு நகரில் 5 அடி உயரத்திற்கு எழும்பிய சுனாமி அலைகள் சுமார் 350000 மக்கள் வசிக்கும் பகுதியை தாக்கியது. இதனால் அந்நகரமே மோசமான சூழ்நிலையை சந்தித்துள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கம் மற்றும் சுனாமியில் சிக்கி இதுவரை 420 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இந்த பேரழிவில் சிக்கி பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் இந்தோனேஷிய நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது.
இந்நிலையில் நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிக்கப்பட்ட இந்தோனேஷிய மக்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து மோடி தனது சமூகவலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, இந்தோனேஷியா ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தோனேஷிய நாட்டிற்கு இந்தியா துணை நிற்கும் எனக் கூறினார்.