

புதுடெல்லி
திரிபுராவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த பின்னர் பல்வேறு பகுதிகளில் வன்முறை வெடித்தது. அங்கு லெனின் சிலை அகற்றப்பட்டது பதட்டத்தை அதிகரித்து உள்ளது. பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. லெனின் சிலை அகற்றப்பட்டதை பா.ஜனதா தலைவர்கள் பலர் நியாயப்படுத்தி வருகிறார்கள். இதற்கிடையே எதிர்க்கட்சியினர் தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பதிவில், லெனின் யார், அவருக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, கம்யூனிசத்துக்கும், இந்தியாவுக்கும் என்ன தொடர்பு, லெனின் சிலை உடைக்கப்பட்டது திரிபுராவில் இன்று.
நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈ.வே.ரா சிலை (பெரியார்) என்று கூறியிருந்தார். இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஆங்காங்கே எச்.ராஜாவுக்கு எதிராக போராட்டமும் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து எச்.ராஜா வருத்தம் தெரிவித்தார்.
முன்னதாக திரபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதற்கும், பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா பேஸ்புக் பதிவிற்கும் பிரதமர் மோடி கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பேசி உள்ளார். சிலைகளை சேதப்படுத்தும் சம்பவம் குறித்து உள்துறை அமைச்சரிடம் பிரதமர் கேட்டறிந்தார். அப்போது சிலைகள் அகற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.
இதை தொடர்ந்து சிலைகளை சேதப்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும், சிலைகளை சேதப்படுத்தும் செயலை கண்டிக்கிறோம். சிலை உடைப்பவர்கள் மீது மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது.