அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது, பயங்கரவாதத்துக்கும், பிரிவினைவாதத்துக்கும் உலகில் இடம் இல்லை என இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
அபுதாபி பட்டத்து இளவரசருடன் பிரதமர் மோடி ஆலோசனை
Published on

தொலைபேசி உரையாடல்

அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்தனர். இதைப்போல பிராந்திய மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்தும் இருவரும் விவாதித்தனர். குறிப்பாக பொது நலன் சார்ந்த பிராந்திய பிரச்சினைகள் தொடர்பாக அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர்.

சர்வதேச சமூகத்துக்கு வலியுறுத்தல்

அப்போது பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்துக்கு உலகில் இடம் இல்லை என்பதை அவர்கள் ஒத்துக்கொண்டதுடன், இத்தகைய சக்திகளுக்கு எதிராக சர்வதேச சமூகம் ஒன்றிணைந்து நிற்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.அமீரகத்தில் வாழும் இந்தியர்களுக்கு கொரோனா காலத்தில் அந்த நாடு வழங்கிய உதவிகளை இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடி பாராட்டினார். அத்துடன் வருகிற 1-ந் தேதி தொடங்க உள்ள துபாய் கண்காட்சிக்கும் பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

பயனுள்ள உரையாடல்

இந்த சந்திப்பு தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் தளத்தில், மதிப்புக்குரிய முகமது பின் ஜாயத்துடன் பயனுள்ள ஒரு உரையாடல் நடந்தது. எங்கள் விரிவான மூலோபாய கூட்டுறவு மற்றும் சமீபத்திய பிராந்திய முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கொரோனா காலத்தில் இந்திய சமூகத்திற்கு வழங்கப்பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு பாராட்டப்பட்டது. துபாய் கண்காட்சிக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com