

புதுடெல்லி,
நாடு முழுவதும் 74வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. சுதந்திர தினத்தினை முன்னிட்டு நேபாளம், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
இதேபோன்று இந்தியாவுக்கான வங்காளதேசம் மற்றும் சீன தூதர்களும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். சுதந்திர தினத்தில் டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் விருந்து வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதேபோன்று பாதுகாப்பு படைகளுக்கான தலைவர் பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங் மற்றும் இந்திய விமான படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதவுரியா உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.