75-வது சுதந்திர தினத்தின் நினைவாக நாடு முழுவதும் 75 ‘வந்தே பாரத்’ ரெயில்கள்: பிரதமர் மோடி

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தின் நினைவாக நாடு முழுவதும் 75 வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
75-வது சுதந்திர தினத்தின் நினைவாக நாடு முழுவதும் 75 ‘வந்தே பாரத்’ ரெயில்கள்: பிரதமர் மோடி
Published on

சுதந்திர தின உரை

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்த பிரதமர் மோடி, பின்னர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது நாட்டில் மேற்கொள்ளப்பட்டு உள்ள வளர்ச்சி திட்டங்களை அவர் பட்டியலிட்டார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

இந்தியாவில் தயாரிப்போம் திட்டம்

இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை அரசு அறிவித்தது. இந்த திட்டம் கொண்டு வந்த மாற்றத்துக்கு எலக்ட்ரானிக் உற்பத்தி துறை ஒரு உதாரணம் ஆகும். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வரை நாம் சுமார் ரூ.60 ஆயிரம் கோடிக்கான செல்போன்களை இறக்குமதி செய்து வந்தோம். தற்போது இறக்குமதி குறைந்திருக்கிறது. அதேநேரம் ரூ.22 ஆயிரம் கோடி மதிப்பிலான செல்போன்களை நாம் ஏற்றுமதி செய்கிறோம். நாட்டின் உற்பத்தி துறை முன்னேறுகிறது. சர்வதேச சந்தையில் நிலைத்து நிற்கும் சிறந்த தயாரிப்புகளை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச சந்தையே நமது இலக்காக இருக்க வேண்டும்.

வந்தே பாரத் ரெயில்கள்

சுதந்திரத்தின் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி நாட்டின் ஒவ்வொரு மூலையையும் இணைக்கும் வகையில் 75 வாரங்களில் 75 வந்தே பாரத் ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. அடுத்த சுதந்திர தினத்துக்கு முன் இந்த பணிகள் நிறைவடையும். வடகிழக்கு பிராந்திய இணைப்பை பொறுத்தவரை நாம் ஒரு புதிய வரலாற்றை எழுதும் பணியில் இன்று இருக்கிறோம். இந்த இணைப்பு இதயங்களுக்கும் உள்கட்டமைப்புக்கும் இடையிலானது.

அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம்

அனைத்து குடும்பங்களுக்கும் மின்சாரம் கிடைக்கச் செய்து, கழிவறை கட்டுவதற்கு உண்மையான முயற்சிகளை மேற்கொண்டது போல, திட்டங்களின் செறிவூட்டலை அடைவதை இலக்காகக் கொண்டு முன்னேற வேண்டும். இதற்காக நீண்ட காலக்கெடுவை வைத்திருக்காமல், சில வருடங்களுக்குள் நமது தீர்மானங்களை உண்மையாக்க வேண்டும். நாம் இன்னும் முன்னோக்கி செல்ல வேண்டியிருக்கிறது. அதாவது அனைத்து கிராமங்களுக்கும் சாலை வசதி, அனைத்து குடும்பங்களுக்கும் வங்கிக்கணக்கு, அனைத்து பயனாளிகளுக்கும் ஆயுஷ்மான் பாரத் அட்டை, தகுதியான அனைவருக்கும் உஜ்வாலா திட்டத்தின்கீழ் கியாஸ் இணைப்பு போன்றவை சென்று சேர வேண்டும். அந்த வகையில் 100 சதவீதத்தை எட்டும் மனநிலையை நோக்கி நடைபோட வேண்டும். சாலையோரம், நடைபாதைகள் மற்றும் வண்டிகளில் தங்கள் பொருட்களை விற்கும் நமது தெரு விற்பனையாளர்களைப் பற்றி இதுவரை சிந்திக்கவில்லை. இந்த ஊழியர்கள் அனைவரும் தற்போது சுவநிதி திட்டத்தின் மூலம் வங்கி அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளனர்.

பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு

நலிந்த பிரிவுகளுக்கும், துறைகளுக்கும் நாம் கை கொடுக்க வேண்டும். அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அக்கறையுடன், தலித், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், ஆதிவாசிகள் மற்றும் பொதுப் பிரிவைச் சேர்ந்த ஏழை மக்களுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படுகிறது. மருத்துவக்கல்வி துறையில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அனைத்து இந்திய பிரிவில் சமீபத்தில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளுக்குள் 4 கோடி குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு தீர்வு காணும் நோக்கில் மதிய உணவு போன்ற பல்வேறு திட்டங்களின் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்படும் அரிசி 2024-ம் ஆண்டுக்குள் வலுவூட்டப்பட்டு வழங்கப்படும்.

இளைஞர்களிடம் நம்பிக்கை

இதைப்போல எலக்ட்ரிக் இயக்கத்தை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. எலக்ட்ரிக் வாகனங்கள் வருவாயை தருவதுடன், இந்திய ரெயில்வேயும் முற்றிலும் மின்மயமாக்கலை நோக்கி நகர்ந்து வருகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் இளைய தலைமுறை நம்மை பெருமையடைய வைத்துள்ளது. அந்த வீரர்கள் அனைவரும் இன்று நம்மிடையே உள்ளனர். அவர்கள் நமது மனங்களை வென்றிருப்பதுடன், இளைய தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் உள்ளனர். நாட்டின் இளைஞர்களிடம் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன். இது ஒரு செய்யக்கூடிய தலைமுறை ஆகும். இவர்களால் ஒவ்வொரு இலக்கையும் அடைய முடியும்.

இவ்வாறு பிரதமர் மாடி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com