கிறிஸ்துமஸ் விழா பிரார்த்தனையில் பங்கேற்ற பிரதமர் மோடி

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
புதுடெல்லி,
இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்கள் கிறிஸ்துமஸைக் கொண்டாடுகிறார்கள். அந்த வகையில், இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி முக்கிய தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் ஒருவொருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். வேளாங்கண்ணியில் பிரமாண்ட பந்தல் மற்றும் கிறிஸ்துமஸ் டவர் அமைக்கப்பட்டு, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது. மத வேறுபாடின்றி மக்கள் சமத்துவத்துடன் பங்கேற்று, கிறிஸ்துமஸ் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிலையில், கிறிஸ்துமஸ் விழாவையொட்டி, டெல்லி கத்தீட்ரல் தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு மக்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்தார். மேலும் அங்குள்ளவர்களுக்கு பிரதமர் மோடி கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், “டெல்லியில் உள்ள பேராலயத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் திருப்பலியில் கலந்துகொண்டேன். அன்பு, அமைதி மற்றும் கருணை என காலத்தால் அழியாத செய்திகளை இந்த கூட்டம் பிரதிபலித்தது. கிறிஸ்துமஸின் உணர்வு நம் சமூகத்தில் நல்லிணக்கத்தையும் நல்லெண்ணத்தையும் ஊக்குவிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.






