

புதுடெல்லி,
பிரதமர் மோடி இந்தியசீன எல்லையில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடினார். கேதார்நாத் சிவன்கோவிலுக்கு சென்று சிறிது நேரம் வழிபட்ட அவர், 2013ம் ஆண்டு வெள்ளத்தில் பலத்த சேதமடைந்த கேதார் புரி நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டார். இதுகுறித்து மூத்த அதிகாரிகளுடனும் மோடி ஆலோசனை மேற்கொண்டார். ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடிய போது, சில ஆண்டுகளுக்கு முன்பு கைலாய மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்டபோது, தனக்கு பாதுகாப்பாக வந்த இந்தியதிபெத்திய எல்லை போலீசாரில் சிலரையும் மறக்காமல் மோடி சந்தித்து கலந்துரையாடினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தியசீன எல்லையில் உள்ள 7,860 அடி உயரத்தில் அமைந்துள்ள ஹரிசில் ராணுவ வீரர்களிடம் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் 125 கோடி மக்களுக்கும் ராணுவத்தினர் பாதுகாப்பாக உள்ளனர் என புகழாரம் சூட்டினார். குஜராத் முதல்வராக இருந்தது முதலே நான் தீபாவளி பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறேன். நீங்கள் பனி படர்ந்த, தனித்த உயரமான மலைகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது நாட்டின் பலமாகும். நாட்டின் ஒவ்வொரு பகுதியையும் பாதுகாப்பதுடன், எல்லைகளையும் நீங்கள் பாதுகாத்து வருகிறீர்கள்.
பாதுகாப்பு பணியில் நீங்கள் காட்டும் அர்ப்பணிப்பு, கட்டுப்பாடு ஆகியவைதான் நாட்டின் எதிர்காலத்தையும், 125 கோடி மக்களின் கனவுகளையும் பாதுகாப்பதாக உள்ளது. மக்களிடம் அச்சமில்லாத உணர்வையும் ஏற்படுத்துகிறது. தீபாவளி என்பது விளக்கு ஒளித் திருநாள். இப்பண்டிகை நற்குணத்தை பரப்புவதுடன் மக்களின்பயத்தையும் அகற்றுகிறது. ராணுவத்தின் முன்னேற்றத்துக்கு பல்வேறு நடவடிக்கைகளை எனது அரசு எடுத்து வருகிறது. ஐ.நா. அமைதிப் படையில் இடம் பெற்றுள்ள இந்திய ராணுவ வீரர்கள் திறமை, வீரம், கட்டுப்பாடு ஆகியவற்றில் மிகவும் சிறந்து விளங்குவதாக உலக நாடுகளின் பாராட்டைப் பெற்றுள்ளனர் என்று கூறினார்.