ஆர்மீனியா பொதுத்தேர்தலில் வெற்றி - நிக்கோல் பாஷின்யானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

‘சிவில் கான்ட்ராகட்’ கட்சி 49.81 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.
ஆர்மீனியா பொதுத்தேர்தலில் வெற்றி - நிக்கோல் பாஷின்யானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Published on

புதுடெல்லி,

ஆர்மீனியா நாட்டில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூன் 7-ந்தேதி(நேற்று) நடைபெற்றது. தொடர்ந்து இன்றைய தினம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் ஆர்மீனிய பிரதமர் நிக்கோல் பாஷின்யான் தலைமையிலான ஆளும் ‘சிவில் கான்ட்ராகட்’ கட்சி 49.81 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

இந்த பொதுத்தேர்தலில் நிக்கோல் பாஷின்யானை எதிர்த்து போட்டியிட்ட ‘ஸ்ட்ராங் ஆர்மீனியா’ கட்சியின் தலைவரும், கோடீஸ்வரருமான சாமுவேல் கரபெட்யான் 23.29 சதவீத வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார்.

‘ஸ்ட்ராங் ஆர்மீனியா' கட்சி ரஷியாவுடன் வர்த்தக உறவுகளை வளர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. அதே சமயம் ‘சிவில் கான்ட்ராகட்’ கட்சி ஆர்மீனியாவை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆர்மீனியா பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற நிக்கோல் பாஷின்யானுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்ற தேர்தலில் ‘சிவில் கான்ட்ராக்ட்’ கட்சி பெற்ற மகத்தான வெற்றிக்காக நிக்கோல் பாஷின்யானுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றியானது, உங்கள் தலைமை மற்றும் தொலைநோக்குப் பார்வையின் மீது ஆர்மீனிய மக்கள் வைத்துள்ள அசைக்க முடியாத நம்பிக்கையை பிரதிபலிக்கிறது.

இந்தியாவுக்கும் ஆர்மீனியாவுக்கும் இடையிலான அன்பான மற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு மற்றும் ஒத்துழைப்புப் பிணைப்புகளை மேலும் ஆழப்படுத்த, உங்களுடன் நெருங்கிய ஒத்துழைப்பை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com