

புதுடெல்லி
டெல்லியில் நடந்த கூட்டத்தில், வர்த்தகத்தில் எளிமை, சுயசார்பு பற்றி அரசு செயலாளர்களிடம் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.
டெல்லியில் சேவா தீர்த்தத்தில் மத்திய அரசு செயலாளர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மக்களின் வாழ்க்கையில் அரசின் திட்டங்கள் ஏற்படுத்தும் உறுதியான தாக்கங்களில் கவனம் செலுத்தும்படி அவர்களிடம் கேட்டு கொண்டார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், 2 முக்கிய விசயங்களில் கவனம் செலுத்தப்பட்டன. வர்த்தகம் செய்வதில் மற்றும் வாழ்வதில் எளிமைக்கான விசயங்களில் சீர்திருத்தங்களை மேற்கொள்வது மற்றும் சுயசார்பை (ஆத்மநிர்பார் பாரத்) ஊக்குவித்தல் ஆகிய 2 விசயங்களை நோக்கங்களாக கொண்டு இந்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
அப்போது, இந்த 2 முக்கிய திட்டங்களில் தங்களுடைய அமைச்சகங்கள் மற்றும் துறைகள் சார்பாக எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளை பற்றி செயலாளர்கள் சுட்டிக்காட்டி பேசினர்.
கூட்டத்தில், துறை சார்ந்த குறிப்பிட்ட சவால்களை பற்றி விவாதித்ததுடன், அரசு நிர்வாக மேம்பாடு மற்றும் சேவையை வழங்குதலில் வருங்கால திட்டங்களை பற்றியும் அவர்கள் எடுத்துரைத்தனர். அப்போது, ஒருங்கிணைந்த திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு மிக அவசியம் என வலியுறுத்தியதுடன், பிரதமரின் கதிசக்தியை பரவலாக பயன்படுத்தி துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்போடு செயல்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி அவர்களிடம் கேட்டு கொண்டார்.