ஏழை, பணக்காரன் என இரண்டு இந்தியாக்களை பிரதமர் மோடி உருவாக்கியுள்ளார் - ராகுல் காந்தி தாக்கு

ஏழைகளுக்கு ஒரு இந்தியா, பணக்காரர்களுக்கு ஒரு இந்தியா என இரு இந்தியாவை பிரதமர் மோடி உருவாகியுள்ளதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Image Courtesy: PTI
Image Courtesy: PTI
Published on

காந்திநகர்,

குஜராத்தில் பழங்குடி மக்கள் அடிப்படை வசதிகளின்றி இருப்பதை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, குஜராத்தை ஆட்சி செய்ததைப் போன்றே பிரதமர் நரேந்திர மோடி நாட்டையும் ஆட்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.

முன்னதாக குஜராத் மாநிலத்தில் பழங்குடியினர் சத்யாகிரகம் என்ற நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேரணியைத் தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், 2014-ஆம் ஆண்டு நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவியேற்றார். அதற்கு முன் குஜராத்தின் முதல்-மந்திரியாக இருந்தார். அவர் குஜராத்தில் செய்ததை தான் இப்போது நாட்டிற்கு செய்துகொண்டிருக்கிறார். இதற்கு குஜராத் மாடல் என்றும் பெயர் சூட்டியுள்ளார்.

அவர் என்ன செய்கிறார் என்றால், இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளார். ஒன்று பணக்காரர்கள், அதிகாரம் படைத்தவர்களுக்கான இந்தியா. அதாவது பணம், அதிகாரம் கொண்டவர்களுக்கான இந்தியா. மற்றொன்று சாதாரண மக்களுக்கான இந்தியா. காங்கிரஸ் இரண்டு இந்தியாவை விரும்பாது.

பாஜக மாடலின்படி நீர், நிலம், காடு உள்ளிட்ட வளங்கள் பழங்குடியின மக்கள் மற்றும் பிற ஏழை மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு பணக்காரர்களுக்கு தரப்படுகிறது. மேலும் பழங்குடியின மக்களுக்கான உரிமைகள் அனைத்தும் இந்த ஆட்சியில் பறிபோனது.

பாஜக அரசு நமக்கு எதையும் தராது, அதற்கு பதில் உங்களிடம் இருந்து அனைத்தையும் எடுத்துகொள்ளும். பழங்குடியின மக்கள் தங்கள் கடின உழைப்பால் சாலை, பாலம், கட்டிடங்கள் மற்றும் கட்டமைப்புகளை குஜராத்தில் உருவாக்கியுள்ளனர். இதனால் உங்களுக்கு என்ன கிடைத்தது. ஒன்றும் கிடைக்கவில்லை. நல்ல கல்வியையோ, ஆரோக்கியத்தையோ கூட தராமல் மோடி அரசு ஏமாற்றுகிறது.

கொரோனா பெருந்தொற்றின்போது, குஜராத்தில் 3 லட்சம் மக்கள் இறந்தபோது பிரதமர் மாடியில் இருந்து தட்டுகளில் ஒலி எழுப்பச்சொன்னார். மொபைலில் இருந்து வெளிச்சம் அடிக்க சொன்னார். கங்கை நதி முழுவதும் இறந்த சடலங்கள் மிதந்தன. இந்தியாவில் 50 முதல் 60 லட்சம் மக்கள் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் பாஜகவை வென்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்று ராகுல் காந்தி கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com