

புதுடெல்லி,
சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகேயுள்ள திருவிடந்தையில் நடைபெறும் ராணுவ தளவாட கண்காட்சியை முறைப்படி தொடங்கி வைத்து பார்வையிடுவதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார்.
இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னைக்கு பிரதமர் மோடி இன்று புறப்பட்டார். அவர், காலை 9.20 மணிக்கு சென்னை பழைய விமான நிலையம் வந்தடைகிறார்.
பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம், காலை 9.50 மணி அளவில் மாமல்லபுரம் போய்ச்சேரும் அவர், அங்குள்ள ஹெலிபேடு தளத்தில் இருந்து காரில் புறப்பட்டு, காலை 10 மணிக்கு கண்காட்சி நடைபெறும் திருவிடந்தை சென்று அடைகிறார். அங்கு ராணுவ கண்காட்சியை தொடங்கி வைத்து பேசுகிறார். இந்த தொடக்க விழா மதியம் 12 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாம் தமிழர் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, எஸ்.டி.பி.ஐ., மனிதநேய மக்கள் கட்சி, மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் திரைப்பட இயக்குனர் பாரதிராஜா தலைமையிலான தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை, மணியரசன் தலைமையிலான காவிரி உரிமை மீட்புக்குழு உள்ளிட்ட அமைப்புகளும் அவருக்கு கருப்பு கொடி காட்ட முடிவு செய்து உள்ளன.
எனவே பிரதமர் மோடியின் வருகையையொட்டி, சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன. 8 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
சென்னை விமான நிலையத்துக்கு 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. விமானநிலையத்துக்கு வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றன.