இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம்: டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி


இங்கிலாந்து, மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம்: டெல்லியில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி
x
தினத்தந்தி 23 July 2025 2:31 PM IST (Updated: 23 July 2025 3:31 PM IST)
t-max-icont-min-icon

26-ந் தேதி நடக்கும் மாலத்தீவின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

புதுடெல்லி,

இங்கிலாந்து,, மாலத்தீவு ஆகிய 2 நாடுகளுக்கு இன்று (ஜூலை 23) சுற்றுப் பயணமாக பிரதமர் மோடி புறப்பட்டார். அரசுமுறை பயணமாக, இன்று (ஜூலை 23) பிரதமர் மோடி டெல்லியில் இருந்து இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிரதமர் மோடி முதலில், 23 மற்றும் 24-ந் தேதிகளில் இங்கிலாந்து செல்கிறார். அவர் இங்கிலாந்து செல்வது, இது 4-வது தடவை ஆகும்.

அப்போது இருதரப்பு உறவுகள் மட்டுமின்றி, பிராந்திய, சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினைகள் குறித்தும் இருவரும் பேசுகிறார்கள். வர்த்தகம், பொருளாதாரம், தொழில்நுட்பம், புத்தாக்கம், பாதுகாப்பு, பருவநிலை, சுகாதாரம், கல்வி, மக்களிடையிலான உறவுகள் ஆகியவை பற்றியும் விவாதிக்கிறார்கள்.

இந்த பயணத்தின் முக்கிய அம்சமாக, இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு நாடுகளும் 3 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தியதன் இறுதியில், ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகின்றன.

இதன்பலனாக, 99 சதவீத இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு வரி இருக்காது. இங்கிலாந்து நிறுவனங்கள் விஸ்கி, கார் மற்றும் இதர பொருட்களை இந்தியாவுக்கு எளிதாக ஏற்றுமதி செய்யும். இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லசையும் பிரதமர் மோடி சந்திக்கிறார்.

பின்னர், இங்கிலாந்தில் சுற்றுப்பயணத்தை வெற்றிக்கரமாக முடித்து விட்டு அங்கிருந்து 25-ந் தேதி பிரதமர் மோடி மாலத்தீவு செல்கிறார். அவர் அங்கு செல்வது, இது 3-வது தடவை ஆகும். மாலத்தீவு அதிபராக முகமது முய்சு கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற பிறகு இந்திய தலைவர் ஒருவர் செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

முகமது முய்சுவின் சீன ஆதரவு நிலைப்பாட்டால், இந்தியா-மாலத்தீவு உறவில் விரிசல் ஏற்பட்டது. அதன்பிறகு பிரதமர் மோடி அங்கு செல்வதால், இப்பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. முகமது முய்சுவுடன் பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். 26-ந் தேதி நடக்கும் மாலத்தீவின் 60-வது சுதந்திர தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

1 More update

Next Story