போர் நிறுத்தம் ஏற்படுமா..? தொலைபேசியில் இஸ்ரேல் பிரதமருடன் பிரதமர் மோடி பேசியது என்ன..?

பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

பிரதமர் தலைமையில் நேற்றிரவு மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. ஈரானிய நகரங்கள் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தியதில் பெண்கள், குழந்தைகள் என பலர் கொல்லப்பட்டு உள்ளனர். இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது. இந்த தாக்குதலால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் நாட்டின் தலைநகர் டெல்லியில் பாதுகாப்பு நிலைமை பற்றி அவர் ஆலோசனை மேற்கொள்வார் என தகவல் வெளியாகி இருந்தது.

இதன்படி பிரதமர் மோடி மதுரை பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு டெல்லி சென்ற பின்னர் இரவு 11 மணி அளவில் இந்த கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா, நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் வளைகுடா நாடுகள், அமீரகத்தில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் உரையாடினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தற்போதைய பிராந்திய நிலைமை குறித்து விவாதிக்க பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த இந்தியாவின் கவலைகளைத் தெரிவித்ததோடு, பொதுமக்களின் பாதுகாப்பை முன்னுரிமையாக வலியுறுத்தினேன். போர் நடவடிக்கைகளை விரைவில் நிறுத்த வேண்டியதன் அவசியத்தை இந்தியா மீண்டும் வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com