ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி

ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 31ம் தேதி சீனா செல்கிறார்
டெல்லி,
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி நேற்று இரவு ஜப்பான் புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் புறப்பட்டார். ஜப்பான் செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை சந்திக்கிறார்.
இதனை தொடர்ந்து ஜப்பானில் நடைபெறும் 15வது இந்தியா - ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். இந்த மாநாட்டின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதிக்க உள்ளனர்.
ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி 31ம் தேதி சீனா செல்கிறார். அங்கு ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மேலும், சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்பட பல்வேறு தலைவர்களை பிரதமர் மோடி சந்திக்கிறார். அமெரிக்காவுடன் வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தியா, சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு சர்வதேச அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.






