பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பிரதமர் மோடி உருக்கமான பதிவு


பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: பிரதமர் மோடி உருக்கமான பதிவு
x

கோப்புப்படம்

பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள விசாயாஸ் மாகாணம், செபு நகரத்தில் நேற்று இரவு திடீரென அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.9, 7.0, 7.0 என மூன்று வலுவான நிலநடுக்கங்கள் பதிவாகின. நில அதிர்வை உணர்ந்த மக்கள் உடனடியாக வீடுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறு சாலைகளுக்குச் சென்றனர்.

நிலநடுக்கம் காரணமாக மின் விநியோகம் முற்றிலும் தடைப்பட்டது. இதனால் அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. இந்த நிலநடுக்கத்தில் அப்பகுதியில் இருந்த சில கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகின. நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதியில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.இந்தநிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது. கட்டடங்கள் தரைமட்டமானதில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

பிலிப்பைன்சில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் இழப்பு மற்றும் பரவலான சேதம் குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியா பிலிப்பைன்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story