சபர்மதி ஆசிரமத்தில் பிரதமர் மோடி, ஜெர்மனி அதிபர் அஞ்சலி

காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், சர்வதேச பட்ட திருவிழாவை துவக்கி வைக்க இரு நாட்டு தலைவர்களும் சென்றனர்.
ஆமதாபாத்,
ஜெர்மனியின் அதிபர் பிரெட்ரிக் மெர்ஸ், பிரதமர் மோடி விடுத்த அழைப்பை ஏற்று இந்தியாவில் 2 நாள் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக இன்று காலை இந்தியாவுக்கு வருகை தந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. கடந்த ஆண்டு அதிபராக பொறுப்பேற்ற பின் ஆசிய நாடுகளுக்கு மெர்ஸ் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
இந்நிலையில், பிரதமர் மோடி மற்றும் ஜெர்மனி அதிபர் மெர்ஸ் இருவரும் குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள சபர்மதி ஆசிரமத்துக்கு இன்று காலை சென்று மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர். காந்தியால் 1917-ம் ஆண்டு நிறுவப்பட்ட சபர்மதி ஆசிரமத்துக்கு காந்தி ஆசிரமம் என்ற பெயரும் உண்டு. சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியாவின் முக்கிய மையங்களில் ஒன்றாக இது திகழ்ந்தது.
அவர்கள் இருவரும் காந்திக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், சர்வதேச பட்ட திருவிழாவை துவக்கி வைக்க சென்றனர். இதன்பின் இரு தலைவர்களும் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கூட்ட அரங்கில், சமீபத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இந்திய-ஜெர்மனி மூலோபாய நட்புறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை குறித்து மறுஆய்வு செய்ய உள்ளனர்.
இதன்பின்னர், இதே கூட்ட அரங்கில் இரு தலைவர்களும், தங்களுடைய உயர்மட்ட குழுவினருடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். அப்போது ரூ.44 ஆயிரம் கோடி மதிப்பிலான 6 நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்கும் ராணுவ ஒப்பந்தம் குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வர்த்தகம், முதலீடு, பசுமை எரிசக்தி மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் புதிய ஒத்துழைப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இதன்பின்னர், இருவரும் கூட்டாக பத்திரிகையாளர் சந்திப்பையும் நடத்த உள்ளனர்.
இதன்பின்பு, அவர்கள் பெங்களூரு சென்று ஜெர்மனி நிறுவனங்களை பார்வையிட இருக்கின்றனர். இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு பற்றி மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்ட செய்தியொன்றில், பிரதமர் மோடியும், அதிபர் மெர்சும் வர்த்தக மற்றும் தொழில் துறை தலைவர்களை சந்தித்து பேசுவதுடன், மண்டல மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் கொண்ட விசயங்களில் தங்களுடைய பார்வைகளை பகிர்ந்து கொள்வார்கள் என தெரிவித்து இருந்தது.






