

புதுடெல்லி,
வினாத்தாள் கசிவு காரணமாக கடந்த மாதம் 3-ம் தேதி நடபெற்ற இளங்கலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
நீட் மறு தேர்வு ஜுன் 21-ம் தேதி நடைபெறும் என்று இந்த தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை அறிவித்தது. நீட் வினாத்தாள் கசிவு மற்றும் மறு தேர்வை தொடர்ந்து மாணவ - மாணவிகள் சிலர் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.
இந்தநிலையில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மேலும் ஒரு மாணவி தற்கொலை செய்து கொண்டார். அந்த மாணவியின் பெயர் அகான்ஷா சதுர்வேதி. மத்திய பிரதேசத்தை சேந்தவர். நீட் தேர்வை மீண்டும் எழுதும் துணிவு தன்னிடம் இல்லை என்று அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ்தள பதிவில் ராகுல்காந்தி கூறியிருப்பதாவது:-
அகான்ஷா ஒரு டாக்டராகி நாட்டிற்கும் சமூகத்திற்கும் சேவை செய்ய விரும்பினார். அவரது தந்தை ஒரு விவசாயி. மருத்துவராகும் தன் மகளின் கனவை நிறைவேற்ற அவர் கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.3 லட்சம் கடன் வாங்கினார். மேலும் தன் மகள் நாக்பூரில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்து படிக்க வசதியாக அவர் அங்கேயே சமையல்காரர் வேலையை ஏற்றுக்கொண்டார். ஒரு தந்தையாக அவரால் முடிந்த அனைத்தையும் செய்தார்.
பின்னர் நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது. தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ச்சயமற்ற சூழலில் அகான்ஷாவின் மரணம் தற்கொலை அல்ல. அது பிரதமர் மோடியின் ஆட்சியின் கீழ் இயங்கும் ஊழல் மலிந்த மற்றும் சீர்குலைந்த ஒரு அமைப்பின் துயரமான விளைவாகும்.
தர்மேந்திர பிரதான் இன்னும் தன் பதவியில் தொடர்ந்து அமர்ந்து இருக்கிறார். அதே குழுக்கள் அதே இடமாற்றங்கள். அஹே விசாரணைகள் சீர்திருத்தங்கள் ஏதுமில்லை. நீதியும் இல்லை.
பிரதமர் மோடியின் அதிகாரம் நிரந்தரமானது அல்ல. அது வரும் போகும். ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக நீங்கள் கல்வி அமைப்பை எந்த அளவிற்கு சீரழித்திருக்கீற்களோ அதற்கான விலையை இந்தியாவின் இளைஞர் சமுதாயம் முழுவதுமே இப்போது கொடுத்துக்கொண்டிருக்கிறது.
இவ்வாறு அந்த பதிவில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.