

புதுடெல்லி,
பிரதமர் மோடியின் தலைமையிலான மந்திரிசபை இன்று விஸ்தரிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகையில் மத்திய வர்த்தகதுறையில் இணை மந்திரியாக பணியாற்றிய நிர்மலா சீதாராமன் கேபினட் மந்திரியாக பதவியேற்றுக் கொண்டார். யாரும் எதிர்பார்க்காத ஒரு நிகழ்வாக மத்திய அமைச்சரவையில் பாதுகாப்பு மந்திரியாக நிர்மலா சீதாராமன் அறிவிக்கப்பட்டு உள்ளார். நிர்மலா சீதாராமன் இந்தியாவின் முதல் முழுநேர பெண் மந்திரி என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளார். முன்னதாக இந்திராகாந்தி பிரதமராக இருந்தபோது பாதுகாப்பு துறையை கூடுதலாக சில காலம் கவனித்துவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதுகாப்பு மந்திரியாக அறிவிக்கப்பட்டு உள்ள நிர்மலா சீதாராமனுக்கு பலதரப்பு பாராட்டு தெரிவித்து உள்ளது.
நிர்மலா சீதாராமன் திறமையானவர் என மத்திய மந்திரி அருண் ஜெட்லி புகழாரம் சூட்டிஉள்ளார்.
பாதுகாப்பு துறை வழங்கப்பட்டது தொடர்பாக பேசிய நிர்மலா சீதாராமன், எனக்கு வழங்கப்பட்டு உள்ள மிகப்பெரிய பொறுப்பாகும். மிகவும் மகிழ்ச்சியான நாளாகும், என்னுடைய உணர்வை வெளிக்காட்ட முடியவில்லை. இந்திய பாதுகாப்பு விவகாரங்களில் இரு பெண்கள் முக்கிய பங்குபெற்று உள்ளனர், சுஷ்மா ஜி மற்றும் நான். என் மீது எதிர்பார்க்கப்பட்டு உள்ள இலக்கை அடைய செயல்பட வேண்டும், நிரூபிக்க வேண்டும். பதவியேற்பு வரும் செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறலாம் என குறிப்பிட்டார்.
ஆங்கில செய்தி சேனலுக்கு பேட்டியளித்து பேசிஉள்ள நிர்மலா சீதாராமன், இந்திய பெண்கள் சிறப்பாக செயல்பட முடியும் என்ற செய்தியை பிரதமர் மோடி அனுப்பிஉள்ளார் என கூறிஉள்ளார்.
பெண் ஒருவர் பாதுகாப்பு மந்திரியாக அறிவிக்கப்பட்டது தொடர்பான கேள்விக்கு பதிலளித்து பேசிஉள்ள நிர்மலா சீதாராமன், பிரதமர் மோடி எப்போதுமே பெண்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார், இந்திய பெண்கள் செயல்பட முடியும் என அவர்களுக்கு செய்தியை அனுப்பிஉள்ளார். நினைத்து பாருங்கள், பாதுகாப்பு தொடர்பான கேபினட் விவகாரங்களில் இரு பெண்கள் இடம்பெற்று உள்ளனர், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விவகாரங்களில் முடிவுகள் பெண்கள் மற்றும் பிறருடன் இணைந்து எடுக்கப்படும். இதுவே பெண்களுக்கு மிகப்பெரிய செய்தியாகும், என கூறிஉள்ளார்.