பிரதமர் மோடியை இன்று சந்திக்கிறார் இங்கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்மர்

இரு நாடுகளும் செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் பற்றி இரு தலைவர்களும் ஆய்வு செய்கிறார்கள்
மும்பை,
இங்கிலாந்து பிரதமராக கியர் ஸ்டார்மர் கடந்த ஆண்டு பதவி ஏற்றதிலிருந்து, இந்தியாவுடன் வர்த்தகம் உள்ளிட்ட உறவுகளில் அதிக நெருக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் பிரதமர் மோடி இங்கிலாந்து சென்றபோது, இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி, இங்கிலாந்து நாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் சொகுசு கார்கள், விஸ்கி, மின்னணு சாதனங்கள், விமான உதிரி பாகங்களின் விலை கணிசமாக குறையும். இதேபோல், இந்தியாவின் ஜவுளி, நகைகள், மருந்துகள், அரிசி, தேயிலை, உணவு பொருட்கள், ரசாயனப் பொருட்களின் விலை இங்கிலாந்தில் பெருமளவு குறையும்.
இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்துள்ள நிலையில், இங்கிலாந்துடன் செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் தொடர்பாகவும், வேறு பல அம்சங்கள் தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்த இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று காலை மும்பை வந்தார். அவரை மகாராஷ்டிரா ஆளுநர் ஆச்சார்யா தேவ்வரத் வரவேற்றார். இங்கிலாந்து பிரதமர் அந்த நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர்கள், கல்வியாளர்கள் உள்பட 125 பிரதிநிதிகளையும் தன்னுடன் அழைத்து வந்துள்ளார். இங்கிலாந்து பிரதமரின் இந்திய வருகையை பிரதமர் மோடி வரவேற்று “எக்ஸ்” வலைத்தளத்தில் பதிவிட்டார்.
பிரதமர் மோடியும், இங்கிலாந்து பிரதமரும் இன்று (வியாழக்கிழமை) மும்பையில் சந்தித்து பேசுகிறார்கள். அப்போது கடந்த ஜூலையில் இரு நாடுகளும் செய்து கொண்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் முன்னேற்றம் பற்றி ஆய்வு செய்கிறார்கள். மேலும் செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, ராணுவம், கல்வி, சுகாதாரம், காலநிலை மாற்றம் போன்ற விவகாரங்களில் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாகவும் முக்கிய ஆலோசனைகள் நடத்துகிறார்கள்.
இதுதவிர, மும்பையில் நடைபெற்று வரும் சர்வதேச நிதி தொழில்நுட்ப மாநாட்டிலும் இன்று பிரதமர் மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கியர் ஸ்டார்மர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்கள். இரு நாடுகளுக்கு இடையே செய்யப்பட்டுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மூலம் இருதரப்பு வர்த்தகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.






