

புதுடெல்லி,
குஜராத்தின் நவகம் பகுதியில் நர்மதை ஆற்றின் குறுக்கே சர்தார் சரோவர் அணை கட்டப்பட்டு உள்ளது. அணைக்கு கடந்த 1961ம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டது. நர்மதா நதியின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்தி பல லட்சம் விவசாயிகளுக்கு நீர்ப்பாசன வசதியை ஏற்படுத்தக்கூடிய இத்திட்டம் 56 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டிருந்தது. திட்டத்தினால் பாதிக்கப்பட்ட உள்ளூர் விவசாயிகள் மற்றும் கோர்ட்டு வழக்குகளினால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்த அணையின் உயரம் சமீபத்தில் 138.68 மீட்டராக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலங்களை சேர்ந்த 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதியும் பெற முடியும். உயரம் அதிகரிக்கப்பட்ட இந்த அணையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பல லட்சம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளை இத்திட்டம் பூர்த்தி செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.
சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள குஜராத்தில் பிரதமர் மோடி ஒரு வாரத்தில் மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும்.
சர்தார் சரோவர் அணை திட்டத்தை செயல்படுத்த ஒற்றுமையாக செயல்பட்ட குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மராட்டிய மாநிலத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.