நாடு முழுவதும் 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் - விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர பிரதமர் மோடி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வரும் 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை, விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டு வர அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
நாடு முழுவதும் 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் - விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வர பிரதமர் மோடி அறிவுறுத்தல்
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவிய போது, மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை பல மடங்கு அதிகரித்தது. பல்வேறு உலக நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டன. மேலும் உள்நாட்டிலேயே ஆக்சிஜன் தயாரிப்பதற்கான நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில் கொரோனா 3-வது அலை பரவல் ஏற்பட்டால் ஆக்சிஜன் தேவை மீண்டும் அதிகரிக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் கூறி வருகின்றனர். இதையடுத்து இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி மற்றும் விநியோகத்தை அதிகரிக்க, தேவையான நடவடிக்கை எடுப்பது தொடர்பாக, பிரதமர் மோடி தலைமையிலான உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தின் போது, நாடு முழுவதும் உள்ள 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த 1,500 மையங்களில் தயாரிக்கப்படும் ஆக்சிஜனை வைத்து 4 லட்சம் படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி செய்து கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கேட்டறிந்த பிரதமர் மோடி, அந்த 1,500 ஆக்சிஜன் உற்பத்தி மையங்களையும் கூடிய விரைவில் செயல்பாட்டுக்கு கொண்டு வருவதை உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்க அறிவுறுத்தினார். ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை போதிய அளவில் பராமரிக்கவும், செயல்படவும், மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பயிற்சிகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும்படி அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்காக மாநில அரசுகளுடன் இணைந்து பணியாற்றுமாறும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார். ஒவ்வொரு மாவட்டத்திலும் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட பணியாளர்கள் இருப்பதை உறுதி செய்யும்படியும் மேடி அறிவுறுத்தினார். இதற்கு பதிலளித்த அதிகாரிகள், நாடு முழுவதும் 8 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com