

புதுடெல்லி,
டெல்லியில் நடைபெற்ற 2026 பாரத் மின்சார உச்சிமாநாட்டில், பிரதமர் மோடி எழுத்துப்பூர்வமாக அனுப்பிய உரையை மத்திய மின்சாரத்துறை செயலாளர் பங்கஜ் அகர்வால் வாசித்தார். அதில் பிரதமர் மோடி கூறியிருப்பதாவது;-
“உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரத்தைக் கொண்ட, இந்தியா தனது எரிசக்தி பயணத்தில் ஒரு திருப்புமுனையான தருணத்தில் நிற்கிறது. நாம் உள்கட்டமைப்பை வலுப்படுத்தி, அனைவருக்கும் நம்பகமான எரிசக்தி கிடைப்பதை உறுதிசெய்து வருகிறோம். இந்தியாவில் உற்பத்தி செய்யவும், இந்தியாவில் புதுமைகளை புகுத்தவும், இந்தியாவில் முதலீடு செய்யவும், இந்தியாவுடன் இணைந்து வளரவும் சர்வதேச சமூகத்தை நான் அழைக்கிறேன்.
இந்த உச்சிமாநாடு, இந்தியாவின் வளர்ச்சிக்கு உத்வேகம் அளிக்கும் அர்த்தமுள்ள உரையாடல்களையும் நீடித்த கூட்டாண்மைகளையும் ஊக்குவிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்த உச்சிமாநாடு, மின்சாரம் மற்றும் ஆற்றல் அமைப்புகளை ஒரே தளத்தின் கீழ் கொண்டு வந்து கருத்து பரிமாற்றம், ஒத்துழைப்பு, ஆற்றல் வளர்ச்சி மற்றும் வாழ்க்கை மேம்பாட்டிற்கான பொதுவான பாதையை வகுப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
இது வளர்ச்சிக்கு உத்வேகம் அளித்து, நிலைத்தன்மையைக் கொண்டுவந்து, சர்வதேச இணைப்புக்கான நமது கூட்டு உறுதியை பிரதிபலிப்பதோடு, 2047-ம் ஆண்டிற்குள் வளர்ச்சிமிக்க பாரதம் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையையும் முன்னெடுத்துச் செல்கிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் நாம் அடைந்திருக்கும் முன்னேற்றம் இந்த அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். அதில் 50 சதவீதத்திற்கும் அதிகமான திறன் ஏற்கனவே எட்டப்பட்டுள்ளது. மேலும் 2030-ம் ஆண்டிற்குள் 500 ஜிகாவாட் திறனை அடைவதற்கான தெளிவான பாதை நம்மிடம் உள்ளது.
ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்கட்டமைப்பு போன்ற முன்னெடுப்புகள், உலகளாவிய ஒத்துழைப்புக்கான நமது தொலைநோக்குப் பார்வையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.
துணிச்சலான சீர்திருத்தங்களின் மூலம், மீள்திறன் கொண்ட விநியோகச் சங்கிலிகளைக் கட்டமைப்பதிலும், மின்கல உற்பத்தியை மேம்படுத்துவதிலும், பசுமை வேலைவாய்ப்புகளை உருவாக்குவதிலும், முதலீடுகளை சாத்தியமாக்குவதிலும் இந்தியா ஒரு நம்பகமான எரிசக்தி கூட்டணியாக உருவெடுத்து வருகிறது.
‘சாந்தி சட்டம் 2025’ அணுசக்தித் துறையில் புதிய எல்லைகளைத் திறக்கும். அதே வேளையில், ‘பி.எம். சூர்யா கர் முப்ட் பிஜ்லி யோஜனா’ திட்டம் பரவலாக்கப்பட்ட மின் உற்பத்தி மற்றும் நிலையான நுகர்வை ஊக்குவிக்கிறது.”
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.