

ஐதராபாத்,
தெலுங்கானாவில் ரூ.56 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை இன்று பிரதமர் மோடி தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் மத்திய மந்திரி கிஷன் ரெட்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தெலுங்கானா முதல்-மந்திரி, பிரதமர் மோடியை வரவேற்று நிகழ்ச்சியில் அவருடன் மேடையை பகிர்ந்துகொண்டார். இதற்கு முன்பாக இருந்த முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் கடந்த காலங்களில் பிரதமரின் அதிகாரபூர்வ நிகழ்ச்சிகளை பல சந்தர்ப்பங்களில் தவிர்த்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், 800 மெகாவாட் (பூனிட்-2) தெலுங்கானா சூப்பர் தெர்மல் பவர் திட்டத்தை பெட்டபள்ளியில் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். ஜார்கண்டின் சத்ராவில் வடக்கு கரன்புரா சூப்பர் அனல் மின் திட்டத்தின் 660 மெகாவாட் (அலகு -2) திட்டத்தையும் பிரதமர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதுகுறித்து முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி பேசியதாவது, பிரதமர் என்பவர் ஒரு பெரிய சகோதரனைப் போன்றவர் என்றும், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தை போல மற்ற மாநிலம் முன்னேறுவதற்கு அவரது ஆதரவு தேவை என்றும், காங்கிரஸ் ஆளும் மாநிலமான தெலுங்கானா, மத்திய அரசுடன் மோதலை விரும்பவில்லை என்றும், நல்லுறவை விரும்புவதாகவும் கூறினார்.