வாரணாசியில் ரூ.2,095 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்

பிரதமர் மோடி தனது தொகுதியான வாரணாசியில் ரூ.2,095 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார்.
வாரணாசியில் ரூ.2,095 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
Published on

வாரணாசி,

பிரதமர் நரேந்திர மோடி தனது வாரணாசி நாடாளுமன்றத் தொகுதியில் ரூ.2095 கோடி மதிப்பிலான 22 வளர்ச்சித் திட்டங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் பேசும் போது அவர் கூறியதாவது:-

முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளான இன்று அவருக்கு தலைவணங்குகிறேன். இந்த நாளை நாடு 'விவசாயிகள் தினமாக' கொண்டாடுகிறது. பசு, எருமை மாடுகளை கேலி செய்பவர்கள் கோடிக்கணக்கான மக்கள் நம்பி இருக்கும் வாழ்வாதாரத்தை மறந்து விடுகிறார்கள். பசு தாய் போன்றது. எங்களுக்கு புனிதமானது.

சிலர் இங்கு பசுவை பற்றி பேசுவதையும், பசுவின் சாணத்தை பற்றி பேசுவதையும் குற்றமாக்கியுள்ளனர். பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம், நமக்கு பசு ஒரு தாய் போன்றது. அது மரியாதைக்குரியது. பசுவையும் எருமையையும் கேலி செய்யும் மக்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளால் நடத்தப்படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள். இந்தியாவின் பால்பண்ணைத் துறையை வலுப்படுத்துவது இன்று நமது அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமைகளில் ஒன்றாகும்.

நாட்டில் பால் உற்பத்தி 6-7 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது சுமார் 45 சதவீதம் அதிகரித்துள்ளது. இன்று உலக அளவில் 22 சதவீத பாலை இந்தியா உற்பத்தி செய்கிறது. இன்று உத்தரபிரதேசம் நாட்டிலேயே அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலமாக மட்டுமல்லாமல், பால் துறையின் விரிவாக்கத்திலும் மிகவும் முன்னேறி உள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நாட்டின் பால்வளத்துறையில் புதிய ஆற்றல், கால்நடை வளர்ப்பு, வெண்மை புரட்சி ஆகியவை விவசாயிகளின் நிலையை மாற்றுவதில் பெரும் பங்கு வகிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com