அடுத்த மாதம் மணிப்பூர் செல்கிறார் பிரதமர் மோடி? பரபரப்பு தகவல்

FILEPIC
மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து ஒருமுறைகூட பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.
புதுடெல்லி,
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் 3-ந் தேதி கலவரம் வெடித்தது. இதில் 250-க்கும் அதிகமானோர் பலியாகினர். கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகியும் இந்த இனக்கலவரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.
இதற்கிடையில் மணிப்பூரில் பதற்றத்தை தணிப்பதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நீண்ட காலமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இணைய சேவை தடை செய்யப்பட்டது. இந்திய ராணுவத்தினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இத்தகைய முயற்சிகளால் படிப்படியாக மணிப்பூரில் அமைதி திரும்பினாலும், அவ்வப்போது சில மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. தற்போது அங்கு ஜனாதிபதி ஆட்சி நடைபெற்று வருகின்றது.
மலைவாழ் குக்கி இன மக்கள் தங்களுக்கு தனி நிர்வாகம் வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதே சமயம், இம்பால் பள்ளத்தாக்கில் பெரும்பான்மையாக உள்ள மெய்தி இன மக்கள், தேசிய குடிமக்கள் பதிவேட்டை (NRC) செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், மணிப்பூரில் இனக்கலவரம் நடந்து 2 ஆண்டுகள் ஆன நிலையில், மிசோரம், அசாம் ஆகிய மாநிலங்களில், செப்டம்பர் 12 முதல் 14 ஆம் தேதிகளில் ரெயில்வே மற்றும் பிற முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களைத் தொடங்கிவைக்க பிரதமர் மோடி செல்லவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மணிப்பூருக்கும் பிரதமர் மோடி செல்லலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், பிரதமரின் மணிப்பூர் பயணத்தின்போது, அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தும், சில திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. வரும் செப்டம்பர் 2ம் வாரத்தில் பிரதமர் மோடி இம்பால் மற்றும் சூரசந்த்பூர் மாவட்டங்களுக்கு செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. பிரதமரின் வருகைக்கான தேதிகள் முடிவு செய்யப்பட்டு வருவதாகவும் மணிப்பூர் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மணிப்பூரில் வன்முறை வெடித்ததில் இருந்து, ஒருமுறைகூட பிரதமர் மோடி அங்கு செல்லவில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தன. இந்த நிலையில்தான், பிரதமரின் மணிப்பூர் பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.






