

புதுடெல்லி,
மத்திய பிரதேச முதல் மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகான் இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அப்போது, பிரதமர் மோடி மத்திய பிரதேச அரசின் நிர்வாக முயற்சிகள் குறித்து விவாதித்தார். அதற்கு சிவ்ராஜ் சிங் சவுகான் பதிலளித்தார். மேலும், பல்வேறு விவகாரங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 'மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை சந்தித்தேன். அவர் மாநில அரசாங்கத்தின் நல்ல நிர்வாக முயற்சிகள் மற்றும் அவர்களின் திட்டங்கள் எவ்வாறு மக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றத்தை கொண்டு வருகின்றன என்று விவாதித்தார்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், இதுகுறித்து சிவ்ராஜ் சிங் சவுகான், 'பிரதமர் மோடியை சந்தித்து, மத்தியப் பிரதேசத்தின் வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் குறித்து தெரிவித்தேன். பிரதமர் பல விஷயங்களில் தனது வழிகாட்டுதலை வழங்கினார். பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், மத்திய பிரதேசத்தில் நல்லாட்சி, வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் தொடரும்' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், 'பிரதமர் மோடிக்கு மத்தியப் பிரதேசத்தின் மீது எப்போதும் பாசம் உண்டு. மாநிலத்தின் வளர்ச்சிக்கு கிடைக்கும் அனைத்து விதமான ஒத்துழைப்பிற்காகவும் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்' என்றும் பதிவிட்டுள்ளார்.