வாஷிங்டன் விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்


வாஷிங்டன் விமான விபத்து: பிரதமர் மோடி இரங்கல்
x

விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

அமெரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் என மொத்தம் 64 பேருடன் வாஷிங்டன் மாகாணத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் இரவு (இந்திய நேரப்படி நேற்று காலை) புறப்பட்டது.

விமானம் வாஷிங்டனில் உள்ள ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் தரையிறங்க நெருங்கிக்கொண்டிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான பிளாக் ஹாக் ஹெலிகாப்டர் ரோனால்ட் ரீகன் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் பயணித்தனர்.

விமான நிலையத்தில் தரையிறங்க முன்ற பயணிகள் விமானமும், புறப்பட்ட ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாபரும், விமானமும் போடோமாக் ஆற்றில் விழுந்தது. தகவலறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர். ஆனால், இந்த கோர விபத்தில் பயணிகள் விமானத்தில் பயணித்த 64 பேர், ஹெலிகாப்டரில் பயணித்த 3 பேர் என மொத்தம் 67 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் 28 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. எஞ்சியோரின் உடல்களை தேடும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

வாஷிங்டன் டிசியில் நடந்த துயரமான மோதலில் ஏற்பட்ட உயிர் இழப்பு குறித்த செய்தி ஆழ்ந்த வருத்தமளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் மனமார்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அமெரிக்க மக்களுடன் நாங்கள் ஒற்றுமையுடன் நிற்கிறோம் என பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story