ஜவுளி துறைக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் - பிரதமர் மோடி

பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சியில் திருப்பூரைச் சேர்ந்த 50-க்கு மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஜவுளி துறைக்கு அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் - பிரதமர் மோடி
Published on

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாட்டின் மிகப்பெரிய உலகளாவிய ஜவுளி நிகழ்வுகளில் ஒன்றான பாரத் டெக்ஸ் 2024ஐ பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இன்று தொடங்கியுள்ள பாரத் டெக்ஸ் 2024 கண்காட்சி வருகிற 29ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கண்காட்சியில், நாடு முழுவதுமுள்ள ஜவுளித்துறையினர் தங்கள் நிறுவனத்தின் உற்பத்திப் பொருட்களை காட்சிப்படுத்துகின்றனர். பஞ்சு முதல் ஆடைகள் வரை அனைத்து உற்பத்தி நிலை நிறுவனங்களும், தங்கள் உற்பத்தி திறனை வெளிப்படுத்த இது வாய்ப்பாக அமைந்துள்ளது. ஜவுளித்துறை சார்ந்த இயந்திர உற்பத்தி நிறுவனங்களும் பங்கேற்கின்றன.

இதில் திருப்பூரைச் சேர்ந்த 50-க்கு மேற்பட்ட ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

பாரத் டெக்ஸ் 2024ஐ தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய பிரதமர் மோடி, "ஜவுளித் துறையில் நிலையான மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தமது அரசாங்கத்தின் முயற்சிகளின் விளைவாக நேர்மறை தாக்கங்கள் காணப்படுவதாக தெரிவித்தார்.

கடந்த 2014ஆம் ஆண்டில், இந்திய ஜவுளி சந்தையின் மதிப்பு, 7 லட்சம் கோடி ரூபாய்க்கும் குறைவாக இருந்தது, இன்று, 12 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். கடந்த 10 ஆண்டுகளில், நூல், துணி மற்றும் ஆடை உற்பத்தி 25% உயர்ந்துள்ளது. ஜவுளித் துறையில் தரக் கட்டுப்பாட்டில் அரசு அதிக கவனம் செலுத்துகிறது எனவும் அவர் கூறினார்.

ஜவுளித் துறையில் திறமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிவித்த பிரதமர், நாடு முழுவதும் 19 நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேஷன் டெக்னாலஜி (NIFT) கல்வி நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அருகிலுள்ள நெசவாளர்கள் மற்றும் கைவினைஞர்களும் இந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ளதாக" அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, "இன்று, உலகிலேயே பருத்தி, சணல் மற்றும் பட்டு உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இப்பணியில் லட்சக்கணக்கான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இன்று அரசாங்கம் இலட்சக்கணக்கான பருத்தி விவசாயிகளை ஆதரித்து, அவர்களிடமிருந்து இலட்சக்கணக்கான குவிண்டால் பருத்தியை கொள்முதல் செய்கிறது. அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட கஸ்தூரி பருத்தி இந்தியாவின் சொந்த அடையாளத்தை உருவாக்கும் முயற்சிகளில் முக்கியமானதாக இருக்கும்." என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com