

புதுடெல்லி
இந்தியாவில் வெளிப்படைத்தன்மை, சீர்திருத்தம் ஆகியவற்றால் இந்தியாவின் மீதான உலக பார்வை மாறி வருகிறது என்றும், பொருளாதாரத்தில் நாடு முன்னேற்றம் கண்டு வருவதாகவும் டெல்லியில் நடந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.
23 நாடுகளை சேர்ந்த இந்திய வம்சாவளி பிரதிநிதிகள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இந்தியாவில் நடக்கும் இந்த முதல் மாநாட்டில் 125 பேர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
உங்களின் சாதனைகள் இந்தியர்களுக்கு பெருமை அளிப்பதாக இருக்கும். கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக உலகமே இந்தியாவை உற்று நோக்கி வருகிறது. சீர்திருத்தம் எங்களின் கொள்கை வெளிப்படைத்தன்மை காரணமாக, தற்போது இந்தியா மாற்றம் பெற்றுள்ளது. ஊழல்கள் முற்றிலும் அகற்றப்பட்டுள்ளது. இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தம் நடந்துள்ளது. ஜி.எஸ்.டி.,யால் பொருளாதாரத்தில் பல்வேறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. வெளிப்படைத்தன்மை, சீர்திருத்தமே எங்களின் கொள்கை.
ரயில்வே, நெடுஞ்சாலை, குடிநீர் தேவை, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கடல் வழி வியாபாரம் , இந்தியாவின் இளைஞர்களின் நலன் ஆகியவற்றை மையமாக வைத்தே நாங்கள் முன்னேற்ற நடவடிக்கையில் செயல்பட்டு வருகிறோம். இதன் மூலம் இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெருக்கிட கடும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 177 நாடுகளில் யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கை வெள்ளம், நேபாள பூகம்பம், உள்ளிட்ட அண்டைய நாடுகளுக்கு முதலில் கரம் நீட்டியது இந்தியாதான். சேவை என்பது நமது பலத்தின் அடையாளம்.
உலகம் முழுவதுமான புவி பாதுகாப்பில் இந்தியா தனது பங்கை அளித்து வருகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களும், அங்குள்ள பிரநிதிகளும் இந்தியாவின் அடையாள தூதர்கள். வெளிநாடு வாழ் இந்தியர்களின் நலனில் இந்தியா முழு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கு சுஷ்மா சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
#NarendraModi / #WorldBank / #InternationalMonetaryFund / #Moodys / #IMF #PIO