குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்: பிரதமர் மோடி உறுதி

20 ஆண்டுகளுக்கும் மேலாக விவாதித்த பிறகுதான் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பேசினார்.
குறைந்த பட்ச ஆதார விலை தொடரும்: பிரதமர் மோடி உறுதி
Published on

புதுடெல்லி,

மத்திய பிரதேச மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில், காணொளி வாயிலாக பிரதமர் மோடி கலந்துகொண்டு விவசாயிகளிடையே உரையாற்றினார். பிரதமர் மோடி பேசியதாவது:-

விவசாயிகள் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி இரட்டை வேடம் போடுகிறது. விவசாயிகளுக்காக காங்கிரஸ் கட்சி முதலைக் கண்ணீர் வடிக்கிறது. நாங்கள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க விரும்புகிறோம். வேளாண் சட்டங்கள் வியாபாரிகளையும் விவசாயிகளையும் இணைக்கும் வகையில் உள்ளது. வேளாண் சட்டங்களால் விவசாயிகளின் பொருளாதாரம் மேம்படும்.

விவசாயிகள் தற்கொலை செய்வதை தடுக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. தொழில்நுட்பத்துறை வளர்ச்சியானது விவசாயத்துறை-விவசாயிகள் இடையே மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. விவசாயிகளுக்காக இந்தியா முழுவதும் குளிர்பதன கிடங்குகள் தொடங்கப்படும்.

இன்று, மத்திய பிரதேசத்தில் உள்ள 35 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.16 ஆயிரம் கோடி நிவாரணம், அவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று, ஏராளமான விவசாயிகளுக்கு கிசான் கடன் அட்டை வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக, அவை எல்லா விவசாயிகளுக்கும் கிடைக்காமல் இருந்தது. ஆனால் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு கிடைக்கும்வகையில் விதிகளை நாங்கள் மாற்றினோம்.

வேளாண் சட்டங்கள் ஒரே இரவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. கடந்த 20-30 ஆண்டுகளாக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இந்த சீர்திருத்தங்கள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டன. வேளாண் வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் முற்போக்கான விவசாயிகள் சீர்திருத்தங்கள் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.

குறைந்தபட்ச ஆதார விலை இல்லை என்பது மிகப்பெரிய பொய். சதி. எப்போதும் குறைந்தபட்ச ஆதார விலை தொடரும் என விவசாயிகளுக்கு உறுதியளிக்கிறேன். அதனை நீக்கும் கேள்விக்கே இடமில்லை. எனது ஆட்சி காலத்தில் தான் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. எனது ஆட்சி காலத்தில், விவசாயிகளுக்கு அதிகளவு பணம் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com