பிரதமர் மோடி பாதுகாப்பு விதிமீறல்; உள்துறை அமைச்சகத்துக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: பஞ்சாப் அரசு தகவல்

பிரதமர் மோடி பாதுகாப்பு விதிமீறல் பற்றி ஓரிரு நாட்களில் உள்துறை அமைச்சகத்துக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என பஞ்சாப் அரசு தெரிவித்து உள்ளது.
பிரதமர் மோடி பாதுகாப்பு விதிமீறல்; உள்துறை அமைச்சகத்துக்கு இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்படும்: பஞ்சாப் அரசு தகவல்
Published on

புதுடெல்லி,

பிரதமர் மோடி பஞ்சாப்பில் கடந்த 2022-ம் ஆண்டு ஜனவரியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது, அவரது பாதுகாப்பில் விதிமீறல் ஏற்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை குழு ஒன்றை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அதன் அறிக்கை கடந்த 6 மாதங்களுக்கு முன் சமர்ப்பிக்கப்பட்டது.

அதில், பாதுகாப்பில் குறைபாடு ஏற்பட்டதற்கு அப்போது பஞ்சாப் முதன்மை செயலாளராக இருந்த அனிருத் திவாரி, காவல் தலைவர் சட்டோபாத்யாய் மற்றும் பிற உயரதிகாரிகள் ஆகியோரை குற்றவாளிகளாக சேர்த்திருந்தது.

இந்த பாதுகாப்பு மீறல் ஏற்பட்டதும், மத்திய உள்துறை அமைச்சகம் 3 பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது. இதன்படி, பஞ்சாப் டி.ஜி.பி. சட்டோபாத்யாய், பஞ்சாப் ஏ.டி.ஜி.பி. மற்றும் பாட்டியாலா ஐ.ஜி.பி. மற்றும் பெரோஸ்பூர் டி.ஐ.ஜி. உள்பட பஞ்சாப்பின் 12-க்கும் மேற்பட்ட காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அவர்களே பிரதமர் மோடி பாதுகாப்பில் ஏற்பட்ட விதிமீறலுக்கு பொறுப்பானவர்கள் என 3 பேர் கமிட்டி தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து, அந்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி விரிவான விளக்க அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கும்படி பஞ்சாப் அரசிடம் மத்திய அரசு கேட்டு கொண்டு உள்ளது.

இதுபற்றி மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, பஞ்சாப் முதன்மை செயலாளர் விஜய் குமார் ஜன்ஜுவாவிடம் அறிக்கையை சமர்ப்பிக்கும்படி கூறியுள்ளார் என கூறப்படுகிறது. இதுபற்றி கடிதம் ஒன்றும் அனுப்பப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பஞ்சாப் முதன்மை செயலாளர் விஜய் குமார் ஜன்ஜுவா இன்று கூறும்போது, இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டு குழு ஒன்றை நியமித்தது. அந்த குழு விசாரணை மேற்கொண்டது.

அவர்கள் எங்களுக்கு அறிக்கை அனுப்பினார்கள். பாதுகாப்பு குறைபாட்டில் என்ன பற்றாக்குறை ஏற்பட்டது, அவற்றில் யாருடைய பங்கு உள்ளது என்று அனைத்து அதிகாரிகளின் பணி பற்றியும் அந்த குழு ஆய்வு செய்து உள்ளது.

அவர்கள் அனைத்து விவரங்களையும் அளித்து உள்ளனர். அந்த அறிக்கை தற்போது எங்களிடம் உள்ளது. அது பரிசீலனையின் கீழ் உள்ளது. நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது. ஆனால், நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு, அனைத்து அதிகாரிகளுக்கும், அவர்களிடம் விசாரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டு உள்ளது.

நாங்கள் இந்த நடவடிக்கைகளை எடுத்து இருக்கிறோம் என்பதற்கான இடைக்கால அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் அனுப்பி வைப்போம் என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com